

ஆலந்தூர் தொகுதியில் தனது மனைவி பிரேமலதாவை நிறுத்த விஜயகாந்த் தயாரா என மேயர் சைதை துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து அண்ணாநகர் 103-வது வட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் கோகுல இந்திரா, அமைச்சர் அப்துல் ரகீம், மாவட்டச் செயலாளர் பாலகங்கா, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனர். அப்போது மேயர் துரைசாமி பேசியதாவது:
இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனையும் தேமுதிக வேட்பாளரையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். கருணாநிதி தனது குடும்பத்துக்கே எல்லா பதவிகளையும் வழங்கி குடும்ப அரசியல் நடத்துகிறார். விஜயகாந்தும் குடும்ப அரசியல்தான் நடத்துகிறார்.
தனது மைத்துனரை சேலம் தொகுதியில் நிற்க வைத்துள்ளார். விஜயகாந்துக்கு ஏழைகளைப் பற்றி கவலையில்லை. அம்மா உணவகம் மூலம் ஒரு நாளுக்கு 25 ரூபாயில் ஏழைகளின் பசியைப் போக்கியவர் நம் முதல்வர். ஆனால், அம்மா உணவகத்தை விஜயகாந்த் விமர்சிக்கிறார்.
சட்டசபை தேர்தலில் தங்களுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக வெற்றி பெற்றது என்று கூறும் தேமுதிக, உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி சதவீதம் என்ன? ஆலந்தூர் தொகுதி, கடந்த தேர்தலில்
தேமுதிக வெற்றி பெற்ற தொகுதி
தானே. இப்போது இடைத்தேர்தலில் அங்கு தனது மனைவி பிரேமலதாவை நிற்க வைத்து, தனது செல்வாக்கை நிரூபிக்க விஜயகாந்துக்கு துணிச்சல் இருக்கிறதா? இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.