Published : 07 Oct 2019 09:59 AM
Last Updated : 07 Oct 2019 09:59 AM

கீழடியில் கண்டறியப்பட்டது திராவிடத் தமிழர் நாகரிகம்: சுப.வீரபாண்டியன் கருத்து

கரூர்

கீழடியில் கண்டறியப்பட்டது திராவிடத் தமிழர் நாகரிகம் என திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.

திராவிடத் தமிழர் கலை இலக்கியப் பேரவை தொடக்க விழா மாநிலத் தலைவர் கடவூர் மணிமாறன் தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசியது:

கீழடியில் கண்டறியப்பட்டது திராவிட நாகரிகமா? தமிழர் நாகரிகமா? என கேட்கின்றனர். அது திராவிடத் தமிழர் நாகரிகம். எப்படியென்றால் தென்னை மரம், மல்லிகைப்பூ என்கின்றனர். தென்னை என்றாலே மரம்தான். மல்லிகை என்றாலே பூ தான். மரம் பொதுப்பெயர், தென்னை என்பது தனிப்பெயர். இது இரு பெயரொட்டு பண்புத்தொகை. அப்படிதான் திராவிட தமிழர் என்பதும் இரு பெயரெட்டு பண்புத்தொகை. திராவிடத் தெலுங்கர், திராவிட கன்னடர், ஏன் திராவிட இந்திக்காரரும் உண்டு.

திராவிடத் தமிழர் என்றால் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள். சாதி, ஆணாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரும் திராவிடர்கள்தான். இதை அகராதியில் தேடவேண்டாம். வரலாற்றில் தேடுங்கள். ஆதிக்கத்தை, கொடுமையை எதிர்ப்போம். சமத்துவம், சமூக நீதிக்காக குரல் கொடுப்போம் என்றார்.

எழுத்தாளர் பொன்னீலன் அமைப்பை தொடங்கி வைத்துப் பேசினார். கவிஞர் யுகபாரதி, நந்தலாலா, இரா.ஓவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x