Published : 07 Oct 2019 09:31 AM
Last Updated : 07 Oct 2019 09:31 AM

150-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியீடு மகாத்மா காந்தியின் உருவம் அச்சிடப்பட்ட எண்கோண வடிவ அஞ்சல்தலை: 40 வெளிநாடுகள் அஞ்சல்தலை வெளியிட்டு கவுரவிப்பு

ப.முரளிதரன்

சென்னை

மகாத்மா காந்தியின் 150-ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு முதன்முறையாக எண் கோண வடிவிலான அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஓராண் டில் மட்டும் 40 வெளிநாடுகள் மகாத்மா காந்தியின் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளன. மேலும், 33 நாடுகள் அஞ்சல் தலையை வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆர்.ஆனந்த், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவில், சிறப்பு அஞ்சல் தலை இந்திய தேசியக் கொடியை சிறப்பிக்கும் வகையில் 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப் பட்டது. பின்னர், மகாத்மா காந்தி யின் நினைவாக அவருக்கு முதல் அஞ்சல்தலை 1948 ஆகஸ்ட் 15-ல் வெளியிடப்பட்டது.

அதேபோல், இந்தியாவுக்கு வெளியே வெளிநாட்டில் மகாத்மா காந்தியின் நினைவாக முதன் முறையாக அமெரிக்காவில்தான் கடந்த 1961-ம் ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. சிங்கப்பூரில் இரு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிய சர்வதேச அஞ்சல்தலை கண்காட்சியில், இந்திய அஞ்சல் துறை சார்பில் மகாத்மா காந்தியின் நினைவாக வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலைகள் தொடர்பான புத்தகங்கள் அதிகளவு விற்பனை ஆனது.

இந்த சிறப்பு அஞ்சல் தலைகள் புதுமையான நோக்கில் வெளியிடப்படுகிறது. அதன்படி, நாற்கரம் வடிவிலான சிறப்பு அஞ்சல்தலை, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1984 நவ.19-ம் தேதியும் ஜவஹர்லால் நேரு நினைவாக 1989 நவ.14-ம் தேதியும் வெளி யிடப்பட்டது. 1985 அக்.10-ம் தேதி எல்லை சாலை நிறுவனம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில், முக்கோண வடிவிலான சிறப்பு அஞ்சல்தலையும் 2008 ஆக. 2-ம் தேதி அலிப்பூர் உயிரியல் பூங்காவில் அல்தாப்ரா வகை ராட்சத ஆமையின் நினைவாக அறுகோண வடிவிலான சிறப்பு அஞ்சல்தலையும் வெளியிடப் பட்டது.

இந்நிலையில், 2 ஆண்டுகள் கொண்டாடப்படும் மகாத்மா காந்தியின் 150-ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2018 அக்.2-ம் தேதி முதன்முறையாக வட்டவடிவ அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு முதன்முறையாக எண்கோண வடிவிலான அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. அவரது நினைவாக இந்தியாவில் இதுவரை 75 சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மகாத்மா காந்தியின் நினைவாக சிறப்பு அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளன. மகாத்மா காந்தி யின் 150-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஓராண் டில் மட்டும் இதுவரை 40 நாடுகள் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டும் மேலும் 33 நாடுகள் வெளியிட விருப்பம் தெரிவித்தும் உள்ளன.

இந்த சிறப்பு அஞ்சல்தலை ஒன்றின் விலை ரூ.25. ஆறு ஸ்டாம்ப்புகள் அடங்கிய ஒரு ஷீட்டின் விலை ரூ.150. மேலும், இந்த அஞ்சல்தலைகள் சில்வர் பாயில் எம்போசிங் முறையில் அச்சிடப்பட்டுள்ளன. இவ்வாறு ஆனந்த் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x