

சென்னை
ராதாபுரம் தொகுதிக்கு மறு வாக்கு எண்ணிக்கை கூடாது என்று சொல்லவில்லை. தபால் வாக்குகளுக்கு பள்ளி ஆசிரியர் அட்டெஸ்ட் செய்யலாமா என்று சட்ட வினா எழுவதாலேயே வழக்கு தொடர்ந்தேன் என்று இன்பதுரை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை (அதிமுக) 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு, தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 4-ம் தேதி மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் சர்ச்சைக்குரிய 19, 20, 21 ஆகிய 3 சுற்று வாக்குகள் மட்டும் மீண்டும் எண்ணப்பட்டன. மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்ச நீதிமன்றம் வரும் 23-ம் தேதி வரை தடை விதித்துள்ளது. இதற்கிடையில், இதுபற்றி கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘இன்பதுரை தற்போது துன்பதுரை ஆகிவிட்டார்’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை நேற்று கூறிய தாவது:
கடந்த 2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக வேட்பாளருக்கு விழுந்த 201 தபால் வாக்குகள் முறையாக அட்டெஸ்ட் செய்யப்பட வில்லை. நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்தான் அதை அட்டெஸ்ட் செய்திருந்தனர். பெருவாரியான தபால் வாக்குகளை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் அட்டெஸ்ட் செய்திருந்தார்.
எனவே, 201 தபால் வாக்குகளை செல்லாது என்று அறிவிக்குமாறு தேர்தல் அதிகாரியிடம் முறை யிட்டேன். அவை முறையாக அட்டெஸ்ட் செய்யப்படாததால், தேர்தல் விதிகளின்படி அவற்றை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது என் தரப்பு வாதமாக இதை எடுத்து வைத்தேன். இதில், தபால் வாக்குகளை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அட்டெஸ்ட் செய்ய முடியுமா என்ற சட்ட வினா எழுகிறது. மறு வாக்கு எண்ணிக்கை கூடாது என்று நான் கூறவில்லை. சட்ட வினா எழுவதால் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அட்டெஸ்ட் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்தால் எண்ணலாம். அதற்கு நான் தடையாக இருக்கமாட்டேன்.
ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘எங்களுக்கு முடிவு தெரிந்துவிட்டது. ராதாபுரத்தில் திமுக வெற்றி பெற்றுவிட்டது’’ என்று சுற்றிவளைத்து கூறியுள் ளார். இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அரசியல் ஆதாயம் பெற, மக்களை திசை திருப்பவே ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.
கொளத்தூர் வழக்கு
இன்பதுரை, துன்பதுரை ஆகி விட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலினின் தந்தையார் அவருக்கு முதலில் அய்யாதுரை என்ற பெயரை வைப்பதாக நினைத்து, அதன் பிறகுதான் மு.க.ஸ்டாலின் என்று பெயர் வைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
ராதாபுரம் வழக்கில் வெற்றி பெற்று, இன்பதுரையான நான், பேரின்பதுரையாக வெளியே வருவேன். கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் முடிவில், அய்யாதுரையான அவர்தான் அய்யோ துரை ஆகப் போகிறார்.
இவ்வாறு இன்பதுரை கூறினார்.