

சென்னை
சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வரும்போது, சென்னை விமான நிலைய வான்பரப்பில் பிற விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வரும் 11, 12, 13-ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இதை யொட்டி சென்னைக்கு விமானம் மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11-ம் தேதி வருகிறார். அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் அவரின் வாகனம் செல்லும் பாதை, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது விமானம் வந்து இறங்கும் நேரத்திலும், கலை நிழ்ச்சிகள் நடக்கும் நேரத் திலும் சென்னை விமான நிலை யத்திலும் அதன் எல்லைக்கு உட்பட்ட வான் பரப்பிலும் மற்ற பயணிகள் விமானங் கள், சரக்கு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அந்த நேரத்தில் விமானங்கள் அனைத்துக்கும் நேர பட்டியலை மாற்றி அமைக்கும்படி உத்தரவிடப் பட்டுள்ளது.
சீன அதிபர் பயணிக்கும் வாகனம் வெளியே செல்ல பயன்படுத்தப்படும் 5-வது மற்றும் 6-வது நுழைவு வாயில் பகுதி சுத்தம் செய்யப் பட்டு வண்ணம் தீட்டப்படு கிறது. சுவர்களில் ஓவியமும் வரையப்படுகிறது. நுழைவு வாயி லின் முன் பகுதியில் செயற்கை பூங்காவும் உருவாக்கப்படுகிறது. விமான நிலைய பகுதியில் போஸ் டர் ஒட்டக் கூடாது என்று சென்னை மாகராட்சி அறிவித்துள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களும் அகற்றப்பட்டு வருகின்றன.
சீன அதிபர் வரும்போது போராட்டமோ, எதிர்ப்பு நட வடிக்கைகளோ நடந்து விடக் கூடாது என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. சீன அதிபர் மற்றும் பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூடுதல் ஆணையர்கள் தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, அருண் உட்பட முக்கிய அதிகாரிகள் மட்டும் இதில் கலந்து கொண்டனர்.