63  ஆண்டுகளுக்கு முன்பே, சென்னையில் மகப்பேறு, குழந்தைகள் நல மையத்தை திறந்து வைத்த சீனாவின் முதல் பிரதமர்: எப்போது, எங்கு தெரியுமா?

சீனாவின் முதல் பிரதமர்  சூ என்லாய் : கோப்புப்படம்
சீனாவின் முதல் பிரதமர்  சூ என்லாய் : கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை


சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் வரும் 11-ம் தேதி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் 3 நாட்கள் தங்கி அதிகாரபூர்வமற்ற பேச்சு நடத்த உள்ளார்கள்.

ஆனால், கடந்த 63 ஆண்டுகளுக்கு முன்பே இதே மாமல்லபுரத்துக்கு வருகை புரிந்த சீனாவின் முதல் பிரதமர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையை திறந்து வைத்துள்ளது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆம், 1956-ம் ஆண்டில் மாமல்லபுரத்துக்கு வருகை புரிந்த சீனாவின் முதல் பிரதமர் சூ என்லாய் மாமல்லபுரம் அருகே 9 கிமீ தொலைவில் உள்ள குழிப்பாந்தண்டலம் எனும் கிராமத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.

குழிப்பாந்தண்டலம் என்பது மாதிரி கிராமம்

குழிப்பாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த வி.ஸ்தலசயனம் என்பவர் கூறுகையில்," கடந்த 1956-ம் ஆண்டு சீனாவின் முதல் பிரதமர் சூ என் லாய் இங்கு வந்து மகப்பேறு குழந்தைகள் மருத்துவமனையை திறந்து வைத்தார். சமீபத்தில்தான் இந்த மருத்துவமனையை புனரமைத்தோம்.

அப்போது, சீனப் பிரதமர் இங்கு அளித்த பட்டயத்தை தொலைத்துவிட்டார்கள். அதன் வரலாற்று முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரியவில்லை.

கடந்த 1954-ம் ஆண்டு இந்த கிராமம், மாதிரி கிராமங்களுக்கான நேரு விருதும் பெற்றுள்ளது. அந்த நேரத்தில் ஏராளமான விஐபிக்கள் இந்த கிராமத்துக்கு வந்தார்கள்.

சீன பிரதமர் தவிர்த்து, அமெரிக்காவின் மார்டின் லூதர் கிங், காமென்வெல்த் பொதுச்செயலாளர் ஹோவார்ட் டி எவ்வில்லே, ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் இந்த கிராமத்துக்கு வந்துள்ளார்கள் ஆனால், இந்த கிராமத்தை மறந்துவிட்டார்கள்" என வேதனையுடன் தெரிவித்தார்

நமது நாட்டின் முதலாவது 5 ஆண்டு திட்டத்தில் சமூக மேம்பாட்டு திட்டத்தில் கீழ் குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் ஏராளமான பணிகள் செய்யப்பட்டன.

நாட்டிலேயே முதல்முறையாக இந்த கிராமத்தி்ல்தான் குறைந்த விலையில் வீடுகட்டும் திட்டத்தில் கூரைகள் மாற்றப்பட்டு, ஓட்டு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. ஏறக்குறைய 300 வீடுகள் இருக்கும் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் காதி நூல்நூற்றலில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாமல் ஜப்பான் தொழில்நுட்பத்தில் விளைச்சலை அதிகப்படுத்தும் தொழில்நுட்பம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னோடித் திட்டமாக கால்நடைகளை உருவாக்குதல், கரூவூட்டல் மையம் இங்கு தொடங்கப்பட்டது.

கிராமத்தில் உள்ள மக்களுக்காக மகப்பேறு மருத்துவமனை, சமூக நூலகம், வானொலியுடன்கூடிய ஓய்வுகூடம் ஆகியவை உருவாக்கித் தரப்பட்டது.

இந்த திட்டம் அனைத்தும் ஜி. வீரராகவாச்சாரி என்ற இந்த கிராமத்தின் தலைவரால்தான் அனைத்தும் சாத்தியமானது. இதை இந்த கிராமத்துக்கு அப்போது வந்திருந்த மாவட்ட ஆட்சியர் ஜேஎம். லோபோ பிரபு விருந்தினர் புத்தகத்தில், " வீரராகவாச்சாரி தலைவராக இருந்தபோது, இந்த கிராமத்தில் ஏராளமான புதிய சிந்தனைகள் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சமூக திரையரங்கம், புதிய வீடுகள், ஜப்பானிய முறையில் பயிர் செய்தல், வழிகாட்டும் முறைகள் போன்றவை அறிமுகமாகின. இந்த கிராமம் தொடர்ந்து தனது நிலையை தக்கவைக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். தனிமனிதராக வீரராகவாச்சாரி பல பணிகளைச் செய்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வீரராகவாச்சாரியின் மகன் ஸ்தலசயனம் கூறுகையில், " தனது சொந்த பணத்தை என் தந்தை கிராமத்தின் நலனுக்காக செலவிட்டார். கடந்த 1965-ம் ஆண்டு அவர் இறக்கும்போது, அவரின் 40 ஏக்கர் நிலமும் விற்கப்பட்டு ஏழைக் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டன.

ஆனால் காலப்போக்கில் அதை மக்கள் மறந்துவிட்டார்கள். இப்போது, மீதம் இருப்பது, சூ என்லாய் திறந்துவைத்த மருத்துவமனை மட்டும்தான்.அதுவும் தற்போது இடிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது. எங்களிடம் மட்டுமே அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விருந்தினர் குறித்த கையேடுகள் இருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in