Published : 06 Oct 2019 12:21 PM
Last Updated : 06 Oct 2019 12:21 PM

காவிரி தாலாட்டும் பூலாம்பட்டியை சுற்றுலா தலமாக்க வேண்டும்: பூங்கா உள்ளிட்ட வசதிகள் அமைக்கவும் பொதுமக்கள் வலியுறுத்தல்

சேலம்

சேலம் மாவட்டத்தில் காவிரியின் தாலாட்டு கேட்டு வளர்ந்து கொண்டி ருக்கும் பூலாம்பட்டி கிராம மக்கள், தங்கள் ஊரின் அழகைக் கொண்டு இதனை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் உள்ள எடப்பாடி நகராட்சியில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ளது பூலாம்பட்டி. இக்கிராமத்துக்குள் நுழையும்போதே, சாலையின் இருபுறமும் கரும்பு மற்றும் வாழைத்தோட்டங்கள் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றன. ஊரெங்கும் பச்சைப் பட்டாடை போர்த் தியது போல, பசுமை கொஞ்சுகிறது. சும்மாவா...காவிரி தாலாட்டும் ஊரல்லவா இது.

நேரடி பாசனம்

தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணை, சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள போதிலும், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை சேலம் மாவட்டத்துக்கு பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் மக்களுக்கு உண்டு. ஆனால், பூலாம் பட்டி கிராமத்தினருக்கு அந்த வருத்தம் கிடையாது. சேலம் மாவட்டத்தில் காவிரியின் நேரடி பாசன பகுதியாக இருப்பதே அதற்குக் காரணம்.

மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாவிடினும், குடிநீர் தேவைக்காகவாவது, காவிரியில் விநாடிக்கு 500 கனஅடி நீரை திறக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால், மேட்டூரில் இருந்து வெளியேற்றப்படும் நீர் காவிரி வழியாக பூலாம்பட்டிக்கு வந்து சேர்ந்துவிடும் என்பதால் இங்கு குடிநீர் மட்டுமல்ல, விவசாயத்துக்கான நீர் தேவையும் பிரச்சினையின்றி கிடைக்கிறது.

விவசாயமே பிரதானம்

கிராமத்தின் பெரும்பாலான மக்களுக்கு விவசாயமே பிரதான தொழில். நெல், பொங்கலுக்கு படையலிடும் செங்கரும்பு, வாழை, காய்கறி வகைகள், தென்னை என இக்கிராமத்தில் பயிரிடப்படும் பயிர்களை பட்டியலிடலாம். பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அதிகளவில் நெல் சாகுபடி உள்ளதால், இங்கு அரசு சார்பில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

விவசாயத்துக்கு அடுத்தபடி, பூலாம்பட்டியில் மீன்பிடி தொழிலும் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளது. காவிரியில் வலை விரித்து, தினமும் மீன் பிடிக்கப்படுகிறது. இயற்கையாக வளரும் மீன்களான கெழுத்தி, கெண்டை, நெத்திலி மற்றும் அணை வளர்ப்பு மீன்களான கட்லா, ரோகு என பலவகை மீன்கள் இங்கு காவிரியில் பிடிக்கப்படுகிறது. தினமும் பிடிபடும் மீன்கள் உள்ளூர் தேவைக்கு போக, மீதமுள்ளவை அருகிலுள்ள ஈரோடு மாவட்டம் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கொட்டிக்கிடக்கும் அழகு

எனவே, மண் சார்ந்து, தொழில் சார்ந்து மக்களுக்கு பிரச்சினைகள் ஏதுமில்லை. எனினும் மக்களுக்கு உள்ள வருத்தமெல்லாம், குட்டி கேரளா எனப்படும் பூலாம்பட்டியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தினால், ஊருக்கு கூடுதல் பெருமை கிடைக்கும் என்பதே அது.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:

காவிரி பாயும் இடமெல்லாம் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும். அதற்கு உதாரணம் எங்கள் ஊர். இங்குள்ள காவிரி கரையில் இருந்து மறுகரையில் உள்ள நெறிஞ்சிப்பேட்டை ஊருக்கு செல்வதற்கு, பூலாம்பட்டியில் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட படகுகள் இயக்கப்படுகிறது. சுமார் 20 பேர் வரை பயணிக்கும் இந்த படகில், காவிரியின் மீது பயணிப்பது பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும்.

பூலாம்பட்டியில் இருந்து காவிரியின் மறுகரையை பார்க்கும்போது, அங்குள்ள பிரம்மாண்டமான பால மலை, அதன் அடிவாரத்தில் உள்ள தென்னந்தோப்புகள், மரங்கள் என யாவும் ஒரு ஓவியத்தை பார்ப்பது போல, கொள்ளை அழகுடன் இருக்கும். மறுகரைக்கு சென்றால், பவானி- மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

பூலாம்பட்டியில் இருந்து கூப்பிடு தொலைவில் காவிரி கதவணை கட்டப்பட்டுள்ளது. அதனால், காவிரியில் வரும் நீர் தேக்கப்பட்டு, அதில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கதவணையும் கூட ஒரு சுற்றுலா இடமாக உள்ளது.

எதிர்பார்ப்பு...

இயற்கை கொஞ்சி விளையாடும் பூலாம்பட்டியை சுற்றுலா தலமாக்க வேண்டும். மேலும், இங்கு சுற்றுலா துறை மூலம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா, தங்குமிடம், உணவுக்கூட வசதி, காவிரியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுக்க வேண்டும். அத்துடன், காவிரியின் குறுக்கே ஒரு வாகனப் போக்குவரத்துக்கான பாலம் அமைக்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட கால கோரிக்கை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x