

கோவையில் இன்று (அக். 6) நடை பெற உள்ள அமமுக செயல்வீரர் கள் கூட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுத்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் கர்நாடக மாநில செயலரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான வா.புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கோவை மசக்காளிபாளையத் தில் உள்ள ஹர்ஷா மஹாலில் இன்று காலை 11 மணியளவில் கோவை மண்டல அமமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள் ளது. இது குறித்து வா.புகழேந்தி கூறியதாவது: அமமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி.தினகரன், கட்சியின் வளர்ச்சி குறித்து பேசு வதேயில்லை. போகும் இடங்களில் எல்லாம் என்னைப் பற்றியோ அல் லது தங்கத் தமிழ் செல்வனைப் பற்றியோதான் பேசுகிறார். அவ ரது பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. கட்சி வளர்ச்சி குறித்து அவருக்கு அக்கறையில் லையோ என்று தோன்றுகிறது.
அதேபோல, தொடர்ந்து எல்லா தேர்தல்களையும் புறக்கணித்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்கப் போகிறாரா அல்லது அதையும் புறக்கணிக்கப் போகிறாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, தினந்தோறும் தொய்வை நோக்கித்தான் கட்சி சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து எடுத்துக் கூறினாலும், சரி செய்துகொள்ளும் நிலையில் அவர் இல்லை. எனவே, கோவையில் நடைபெற கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் கூடி ஆலோசிக்க உள்ளோம். இதில் மிக முக்கியமான முடிவுகளை எடுத்து, தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம்.
கட்சிக்காக சிறை சென்ற நிர் வாகிகள், தொண்டர்கள், வழக்கில் இருப்பவர்கள், அவர்களுக்கு உதவிய வழக்கறிஞர்களை கவுரவித்து, நினைவுப் பரிசு வழங்கவும் உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.