அக்.11, 12-ல் இரு நாட்டு உறவு மற்றும் வர்த்தகம் தொடர்பாக இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம் - பாரம்பரிய சின்னங்களையும் பார்வையிடுகின்றனர்

அக்.11, 12-ல் இரு நாட்டு உறவு மற்றும் வர்த்தகம் தொடர்பாக இந்திய பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம் - பாரம்பரிய சின்னங்களையும் பார்வையிடுகின்றனர்
Updated on
2 min read

இருதரப்பு உறவு மற்றும் வர்த்தகம் தொடர்பாக மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் வரும் அக்.11 மற்றும் 12 -ம் தேதிகளில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு சீன அதிபர் இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி அவரை டெல்லிக்கு வெளியில் அதாவது குஜராத்தில், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட இடங் களுக்கு அழைத்துச் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். இதே பாணி யில், டெல்லியில் இல்லாமல் குஜராத், தமிழகம், கர்நாடகம், ஆந்திரா என பல்வேறு மாநிலங் களில் முக்கிய இடங்களில் பேச்சு வார்த்தை நடத்த ஆலோசிக்கப் பட்டது.

இதுகுறித்து சீன அதிபர் தரப்பிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இறுதியாக பல்லவர் கால பாரம் பரியத்தை எடுத்துச்சொல்லும் வரலாற்று சிறப்புமிக்க பகுதியும் யுனெஸ்கோவால் சர்வதேச பாரம் பரிய நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை அடுத்த மாமல்லபுரம் தேர்வானது.

பல்லவ மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட கற்கோயில்கள் நிரம்பிய பகுதி என்பதாலும் பல்லவ மன்னர்கள் காலத்திலேயே சீனாவுடன் பாதுகாப்பு ராணுவ ஒப் பந்தம் ஏற்பட்டதற்கான வரலாற்று சிறப்புமிக்க பகுதி என்பதாலும் மாமல்லபுரம் வர சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சம்மதம் தெரிவித்த தாகக் கூறப்படுகிறது.

இடம் முடிவானதால், இரு நாட்டு அதிகாரிகளும் மாமல்லபுரத்தில் கடந்த மாதம் தொடக்கம் முதலே ஆய்வு செய்து வருகின்றனர். தங்குமிடம், பேச்சுவார்த்தை மற்றும் பொழுதுபோக்கும் இடங் கள் குறித்து இருதரப்பும் பேசி முடிவெடுத்து, பாதுகாப்பு தொடர் பான ஆய்வுகளும் முடிக்கப்பட் டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகை குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, இருவரும் வரும் அக்.11-ம் தேதி முற்பகல், தனி விமானங்கள் மூலம் சென்னை விமான நிலையம் வருகின்றனர். முதலில் வரும் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்கின்றனர். அடுத்த தாக வரும் ஜி ஜின்பிங்கை, மோடி உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

மேலும், தமிழக பாரம்பரிய முறைப்படி சீன அதிபருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங் கிருந்து பிரதமர் மோடி ஹெலி காப்டர் மூலம், திருவிடந்தை சென்று, அங்கிருந்து கோவளம் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை யில் உள்ள ‘தாஜ் பிஷர்மேன் கேவ்’ ஓட்டலில் தங்குகிறார்.

அதேநேரம், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பயணித்து, கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தங்குகின்றனர். அதன்பிறகு அங் கிருந்து கார் அல்லது விமான நிலையம் சென்று ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு பின்னரே இருவரும் கடற்கரையோரம் அமைந்துள்ள தாஜ் ஓட்டலில் தங்குகின்றனர். அங்கு, இவர்களுக்காக 40 சதுர மீட்டர் பரப்பில் 3 அறைகள் தயார் நிலையில் உள்ளன. அங்கு இருவரும் பேச்சுவார்த்தை நடத்து வதாக கூறப்படுகிறது. இதுதவிர, மாமல்லபுரம் பகுதியில் உள்ள அதிநவீன வசதிகள் கொண்ட இரு ஓட்டல்களிலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, மாமல்லபுரத்தில் அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் மற்றும் கடற்கரை கோயில்களை இருவரும் பார்வையிடுகின்றனர். எனவே, இப்பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, அழகூட்டப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் அமர்ந்து தேனீர் அருந்தும் பிரதமர் மோடியும்- சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் பங்கேற்கின்றனர். அதன்பின், பல்வேறு குழுவினர் நடத்தும் பாரம்பரிய இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கின்றனர்.

இச்சந்திப்பின்போது, இந்தியா- சீனா இடையே உள்ள மிக முக்கிய பிரச்சினைகள் குறித்தும், இரு நாட்டு வர்த்தகம் குறித்தும் பேசுகின்றனர். அதன்பின் அக்.12-ம் தேதி பிற்பகல் இருவரும் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், வருகை மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளி யாகும் எனத் தெரிகிறது.

சீன அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் சீன அதிகாரிகள், மாமல்லபுரத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தலைவர்கள் வருகையை யொட்டி அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்திய - சீன அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சீன அதிபரின் பாதுகாப்பை கவனிக்கும் குழுவினர் அவ்வப் போது மாமல்லபுரம் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து வரு கின்றனர். இதன்படி நேற்று சீன அதிகாரிகள் மாமல்லபுரம் கடற் கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in