

எஸ்.முஹம்மது ராஃபி
ராமேசுவரம்
இலங்கையில் தமிழர்கள் அதிக மாக வசிக்கும் முல்லைத்தீவு செம்மலை பகுதியில் நீராவியடி பிள்ளையார் கோயில் உள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு தம்மாலங்கார கீர்த்தி என்ற பவுத்த துறவி இக் கோயில் நிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியைக் கைப்பற்ற முயற்சி செய்தார். மேலும் இங்கு அத்துமீறி புத்த விகாரை நிறுவப்பட்டது. இதனால் பவுத்த துறவியின் முயற் சிக்கு தமிழர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பவுத்த துறவி தம்மாலங்காரகீர்த்தி அண்மையில் கொழும்பில் காலமானார். அவரது உடலை நீராவியடி பிள்ளையார் கோயில் வளாகத்தில் தகனம் செய்ய பொதுபல சேனா இயக்கத் தின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார ஏற்பாடு செய்தார்.
இதை எதிர்த்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பில் முறையிடப்பட்டது. துறவியின் உடலை நீராவியடி பிள்ளையார் கோயில் நிலத்தில் தகனம் செய்ய நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் முல்லைத்தீவு ராணுவ முகாமுக்கு அருகே உள்ள கடற்கரையில் துறவியின் உடலை தகனம் செய்யு மாறு உத்தரவு பிறப்பித்தது.
அதைமீறி கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்தக்கேணிக்கு அருகே துறவியின் உடல் ஆக.23-ம் தேதி தகனம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் இளைஞர் கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இச்சம்பவத் தைக் கண்டித்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப் பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை தமிழீழ விடுதலை இயக் கத்தினர் ஒருங்கிணைத்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பொது பல சேனாவின் பொதுச் செயலா ளர் அத்தே ஞானசாரவை கைது செய்ய வலியுறுத்தினர்.