

பண்பலை உரிமத்துக்கான ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு சான்றிதழ் தராததைச் சுட்டிக்காட்டி, தனியார் பண்பலை வானொலிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழும பண்பலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிடக் கோரியும் சன் குழுமம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வந்தன.
அப்போது, மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரும் பிரதான மனுக்களுக்கு மத்திய அரசு 8 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதேவேளையில், சன் குழுமம் பங்கேற்க உத்தரவிட கோரும் மனு மீதான தீர்ப்பை மட்டும் தள்ளிவைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பண்பலை உரிமத்துக்கான ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.