Published : 05 Oct 2019 09:28 PM
Last Updated : 05 Oct 2019 09:28 PM

ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு மாரடைப்பு: பயணிகள், வாகன ஓட்டிகள் மீது மோதாமல் நிறுத்தியபின் உயிரிழந்த பரிதாபம்

சென்னை

வேளச்சேரி அருகே மாநகரப் பேருந்து ஓட்டுனர் ஓடும் பேருந்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது யார் மீதும் பேருந்தை மோதாமல் நிறுத்த முயற்சி செய்ததில் சில கார்கள் மீது உரசி நின்றது. ஆனால் மாரடைப்பு ஓட்டுனர் உயிரைப் பலிவாங்கியது.

சென்னை கே.கே.நகர் மாநகரப் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தவர் ராஜேஷ் கன்னா(31). தடம் எண் 570 S சிறுசேரி - கோயம்பேடு மார்க்கத்தில் பேருந்தை இயக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

வழக்கம்போல் இன்று மதியம் கோயம்பேட்டில் இருந்து சிறுசேரிக்கு மாநகரப் பேருந்தை ஓட்டிவந்துள்ளார் ராஜேஷ் கன்னா, மதியம் 2-00 மணி அளவில் பேருந்து வேளச்சேரி நூறடிச்சாலையில் சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுனர் ராஜேஷ் கன்னாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்தை ஓரம் நிறுத்தவும் யார் மீதும் மோதிவிடாமல் இருக்கவும் ராஜேஷ்கன்னா பெரும் முயற்சி எடுத்துள்ளார். கடுமையான மாரடைப்பு காரணமாக அவர் மயக்கத்தில் சில வாகனங்களை உரசியபடி பேருந்தை நிறுத்தியுள்ளார்.

இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுனர் ராஜேஷ் கன்னா பேருந்துக்குள்ளேயே மயங்கிக்கிடந்தார், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று பார்த்தபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடுமையான மாரடைப்பு ஏற்பட்டபோதும் பயணிகள் மற்றும் சாலைகளில் சென்ற வாகனங்களின் பாதுகாப்பை மனதில் வைத்து பேருந்தை கட்டுபடுத்தி உயிரிழந்த ஓட்டுனரை எண்ணி பயணிகள் வருத்தம் கலந்த நெகிழ்ச்சியுடன் பேசினாலும் அவர்கள் மத்தியில் இந்த உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியது. பேருந்து மோதியதில் 5 கார்கள் லேசாக சேதமடைந்தன. யாருக்கும் காயம் இல்லை.

பேருந்து ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வாகனங்கள் மீது உரசி விபத்து ஏற்பட்ட தகவலின்பேரில் கிண்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ராஜேஷ்கன்னா உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x