Last Updated : 05 Oct, 2019 06:07 PM

 

Published : 05 Oct 2019 06:07 PM
Last Updated : 05 Oct 2019 06:07 PM

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் திருப்பம்: மாணவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய இடைத்தரகர்கள்- சிபிசிஐடி விசாரணையில் தகவல்

சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள்

தேனி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கின் திடீர் திருப்பமாக இடைத்தரகர்களே மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிட்டு பின்பு வேறு நபர்கள் மூலம் பணம் கேட்டு மிரட்டியது தற்போது தெரியவந்துள்ளது.

எனவே மின்னஞ்சல் புகார் அனுப்பியவரை கைது செய்யும் முயற்சியில் சிபிசிஐடி.போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தகவல் முதலில் மின்னஞ்சல் மூலமே கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியவந்தது. அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் வந்த இந்த மின்னஞ்சலுக்கு முதலில் உரிய நடவடிக்கை இல்லை. இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கும், மீண்டும் தேனி கல்லூரிக்கும் மின்னஞ்சல் வந்தது.

இதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட மருத்துவக்கல்லூரி நிர்வாகம் இதற்கான குழு அமைத்து உதித் சூர்யாவின் சான்றிதழ்களை சரிபார்க்க உத்தரவிட்டது. இதில் முறைகேடு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர் உதித்சூர்யா கல்லூரியை விட்டு வெளியேறினார்.

க.விலக்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனிப்படை விசாரணைக்குப்பிறகு சிபிசிஐடி.க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இதில் உதித்சூர்யா உள்ளிட்ட 4 மாணவர்கள், அவர்களது தந்தைகளும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி இடைத்தரகர்கள் ரஷீத், வேதாசலத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மின்னஞ்சலில் புகார் அளித்தவர்க்கும், இடைத்தரகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்..

மாணவர்கள் ராகுல், பிரவீன் ஆகியோரிடம் ஏற்கனவே நடத்திய விசாரணையின்போது, ஆள்மாறாட்ட பிரச்சினை வெளியில் தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.2 கோடி தர வேண்டும் என்று சிலர் போனில் மிரட்டினர். ஆனால் அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. அதன்பிறகுதான் போலீஸார் எங்களை கைது செய்தனர் என்று தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் மின்னஞ்சல் அனுப்பியவரின் விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் நவீன தொழில்நுட்பம் மூலம் இன்னொரு கணினியை இயக்கி போலியான ஐடி.மூலம் புகார் அனுப்பி உள்ளது தெரியவந்தது.

ஒரே தவறு.. இரண்டு வகையில் பணம்..

இது குறித்து சிபிசிஐடி.போலீஸ் தரப்பில் கேட்டபோது, "திரைப்பட பாணியில் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது. முதலில் இடைத்தரகர்கள் மூலம் மாணவர்களிடம் பல லட்சம் பெற்றுக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்த்துள்ளனர். பிரச்சினை இல்லை என்ற நிம்மதியுடன் படிப்பைத் தொடரும் வேளையில் அந்த இடைத்தரகர்கள் வேறு நபர்கள் மூலம் மாணவர்களை மிரட்டி மேலும் பணம் பறிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அவர்களது தந்தையரிடமும் பேரம் பேசியுள்ளனர். முதலில் யாரும் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர்கள் உதித் சூர்யாவை முதலில் சிக்கவைத்தனர். இந்த விஷயத்தைக் கூறி மற்ற மாணவர்களிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டனர். ஆனால் உதித் சூர்யா கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்ற மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஒரு தவறை செய்ய வைத்து இரண்டு விதங்களில் பணம் பறிக்க முயன்ற விபரம் தெரியவந்துள்ளது. எனவே மின்னஞ்சலில் புகார் அளித்தவரின் விபரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்த விபரம் ஓரளவு தெரிய வந்துள்ளது. விசாரணை பாதிக்கும் என்பதால் அவற்றை சொல்ல முடியாது. அவரை பிடித்ததும் இந்த வழக்கில் மேலும் யார் யார்க்கு தொடர்பு உள்ளது என்பது உள்ளிட்ட முழுவிபரமும் தெரியவரும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x