

ராமேசுவரம்
மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்தியக் குடிமைப் பணியில் (ஐஏஎஸ்) சேர்வதற்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மீன்வளத் துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கம் சார்பில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து தனிக் குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத் துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்பப் படிவங்களை மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்காணும் தகுதியுடையவர்களாக இருத்தல் வேண்டும். பயனாளிகள் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பயனாளிகள் பெற்றோர், பாதுகாப்பாளர் மீனவ கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். பயனாளிகள் பெற்றோர், பாதுகாப்பாளர் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட இனமாக இருந்தால் வயது வரம்பு 35 வரையிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனமாக இருந்தால் வயது வரம்பு 37 வரையிலும் ஊனமுற்றோராக இருப்பின் வயது வரம்பு 42 வரையிலும் இருக்கலாம்.
பயனாளிகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு பயின்று இருக்க வேண்டும். பயனாளிகள் பள்ளிக் கல்வியில் (பன்னிரெண்டாம் வகுப்பில் 1000-க்கு மேல்) 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். பயனாளிகள் படிப்பு முடித்து வேறு பணிகளில் பணிபுரிந்து வந்தாலும் தகுதியிருப்பின் இந்திய குடிமைப்பணியில் சேர்வதற்கான ஆயத்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 09.10.2019 தேதிக்குள் சம்பந்தப்பட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அனுப்பலாம். இதுகுறித்து, கூடுதல் விவரங்களுக்கு துறையின் உதவி, துணை மற்றும் இணை இயக்குநர்கள் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
எஸ். முஹம்மது ராஃபி