

திருநெல்வேலி
மோடியின் கைப்பாவையாக தமிழக அரசு உள்ளது என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் கூறினார்.
இதுகுறித்து அவர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிவை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே உற்று நோக்குகிறது. தமிழக அரசு ஊழல் அரசாக, செயல்படாத அரசாக உள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மக்கள் வாக்களிக்க வேண்டும். நாங்குநேரி தொகுதியில் 11 அமைச்சர்களும், ஏராளமான அதிமுக எம்எல்ஏக்களும் முகாமிட்டுள்ளனர். இத்தனை நாட்களாக வராமல் தேர்தலுக்காக மட்டுமே வருவது ஏன்?
பண பலம், ஆள் பலம், இல்லாததை இருப்பதுபோல் காட்டும் செயல் ஆகியவற்றை மட்டுமே அதிமுக நம்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் அதிமுக அரசு மக்களை தனது அதிகார பலத்தால் மிரட்டுகிறது.
கடந்த 45 ஆண்டுகால வரலலாற்றில் இல்லாத அளவுககு வேலையில்லாத் திட்டாட்டம், வேலை இழப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேலை இழப்புக்குக் காரணமான முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை பதவியில் இருந்து இறக்கி, வேலை இழக்கச் செய்ய வேண்டும்.
தேசப்பிதா என்றால் மகாத்மா காந்தி மட்டுமே. ஆனால், பிரதமர் மோடியை தேசப்பிதா என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். இதை மோடி மறுக்காதது ஏன்?. இந்திய சுதந்திரத்துக்குப் பின் பிறந்த மோடி எப்படி தேசப்பிதா ஆக முடியும். பாஜகவினர் காந்தியை பாராட்டிப் பேசிக்கொண்டு, கோட்சேவின் கொள்ளைகளை பின்பற்றுகின்றனர்.
அதிமுக அரசு 2 முறை உலக முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. ஆனால், எவ்வளவு முதலீடுகள் வந்தன?. முதலீடுகளை ஈர்க்க முதல்வரும் அமைச்சர்களும் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏன்?. பிரதமரை சந்தித்து, தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத சர்வாதிகார நிலையை நோக்கி நாட்டை கொண்டு செல்கின்றனர். பசுவின் பெயரால் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதை சுட்டிக்காட்டிய 50 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே அரசியல் கட்சி என்ற நிலையை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது.
மக்களுக்கு எதிரான திட்டங்களை ஜெயலலிதா துணிந்து எதிர்த்தார். ஆனால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களுக்கு எதிரான பாஜக அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மோடியின் சொல்படி செயல்படும் கைப்பாவையாக உள்ளனர். பாஜகவின் முகமூடியாக செயல்படுகின்றனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் தனது தனித்துவத்தை நாட்டுக்கே எடுத்துக் காட்டியது. இப்போதும் அதை மெய்ப்பிக்க வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பதற்கு சமமானது. எனவே, இந்த இடைத்தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.