

கிழக்கு கடற்கரை சாலையில் வழியெங்கும் வண்ண விளக்குகள், பளபளக்கும் சாலைகள், பன்மடங்கு பாதுகாப்புகள், கெடுபிடிகள் என பரபரப்பாகத் தயாராகிறது மாமல்லபுரம். அடுத்த சில நாட்களில் உலகத்தின் கவனம் மாமல்லபுரத்தை நோக்கி திரும்பப் போகிறது.
வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்தியப் பிரதமர் மோடி இடையிலான அதிகாரபூர்வமில்லாத 3 நாட்கள் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்தச் சந்திப்புக்காகத்தான் எப்போதும் இல்லாத வகையில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரம் படுவேகமாகத் தயாராகி வருகிறது.
சிலைகளைச் சீரமைத்தல் பணிகள் முதல் வண்ணங்கள் தீட்டுதல், வண்ண விளக்குகளை ஒளிரவிடுதல் வரை தீவிரமாகப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில் மற்ற இடங்களில் இல்லாத சிறப்பு, முக்கியத்துவம் மாமல்லபுரத்துக்கு என்ன இருக்கிறது, எதற்காக இந்த இடத்தை இரு தலைவர்கள் சந்திப்புக்குத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்வி பொதுவாக எழும்.
வரலாற்று ரீதியான தொடர்பு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இருந்ததை உறுதிசெய்யும் விதமாகவே இந்தச் சந்திப்புக்கு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கும், சீனர்களுக்கும் இருந்துள்ளது.
வரலாற்று ரீதியாக புத்த (பவுத்தம்) மதத்துக்கும், இந்த மாமல்லபுரத்துக்கும் இடையே நீண்டகாலத் தொடர்பு இருந்துள்ளது. இதற்கான சான்றுகளை மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு சிலைகளில் காண முடியும். பவுத்தர்களின் தியான நிலைகளை விளக்கும் சிற்பங்கள், பவுத்தர்கள் போதனைகள், கலைகள் ஆகியவற்றை விவரிக்கும் கலைச்சிற்பங்கள் இங்கு இடம் பெற்றுள்ளதே அதற்கான சான்று.
கிபி 527களில் தமிழகத்தில் பல்லவர்கள் ஆண்டபோது, மாமல்லபுரம் (மகாபலிபுரம்) துறைமுக நகரமாக இருந்தது. இங்கிருந்து சீனாவுக்கு கடல் வழியாக வர்த்தகம் நடந்துள்ளது என வரலாறு தெரிவிக்கிறது. குறிப்பாக பல்லவர்கள் சீனாவுடன் கடல் வாணிபத்தை நல்லவிதமாக கைகொண்டிருந்தார்கள்.
பல்லவர்கள் காலத்தில் வாழ்ந்த பவுத்தத் துறவி போதிதர்மன், சீனாவில் முக்கியமான துறவியாக இன்றும் வழிபாட்டுக்கு உரியவராக இருக்கிறார். பல்லவர்களின் மூன்றாவது இளவரசரான போதிதர்மன் காஞ்சிபுரத்தில் இருந்து மாமல்லபுரம் வழியாக சீனாவுக்குச் சென்று அங்கு புத்த மத்ததைப் பரப்பியவர். இவரின் காலம் கிபி 527 என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு சென்றபின் போதிதர்மன் 28-வது பிரஜ்நத்ரா எனும் புத்தத் துறவியாக மாறினார்.
ஆகவே, வரலாற்று ரீதியாகவே தொன்றுதொட்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகம், ஆன்மிகம், கலாச்சாரம் அடிப்படையிலான உறவுகள் இருந்தது உறுதியாகிறது. இதை சீனாவுக்கு வெளிப்படுத்தும் விதமாகவே, சீனாவுடன் நட்பை இறுக்கமாக்கிக் கொள்ளவே ஜி ஜின்பிங்- மோடி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையாக வர்த்தகப் போர் நடந்து வரும் நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பிரதமர் மோடி சந்திப்பது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை ராஜாங்க ரீதியாக பன்மடங்கு பலப்படுத்தும்.
இந்த அதிகாரபூர்வமில்லாத சந்திப்பு இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடத்த வாய்ப்பு இருந்தபோதிலும், யுனெஸ்கோ கவனிப்பு பெற்ற மாமல்லபுரத்தில் நடத்த இதுதான் காரணம்.
அதுமட்டுமல்லாமல் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 2014-ம் ஆண்டு மாமல்லபுரம் அருகே தான் டிபென்ஸ் எக்ஸ்போ நடந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் அகமதாபாத்தில் சபர்மதி நதிக்கரையில் அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்தார்கள். அதன்பின் இரு நாடுகள் நட்புறவு, வர்த்தகம் உறவு தொடர்பாக பலமுறை இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
ஆனால், அதிகாரபூர்வமற்ற வகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வுஹான் நகருக்குச் சென்ற பிரதமர் மோடி இருநாட்கள் தங்கி இருந்து, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்காவுக்கு சமீபத்தில் 7 நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் நடத்திய ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இந்தியர்களிடம் பேசிய மோடி, " இந்தியர்கள் அல்லாத 5 அமெரிக்க குடும்பங்களை ஆண்டுதோறும் இந்தியாவைக் காண அனுப்பி வையுங்கள். சுற்றுலாத்துறை இதன் மூலம் வளர்ச்சி பெறும்" எனத் தெரிவித்தார்.
இந்தியாவின் சுற்றுலாத் துறையை வளப்படுத்தும் பிரதமர் மோடியின் திட்டம், நிச்சயம் சீன அதிபருடனான சந்திப்புக்குப் பின் மாமல்லபுரத்தில் வேகமெடுக்கும் என நம்பலாம்.
சீன அதிபர் வந்து சென்றபின், அதன் செய்திகள் சீனாவில் எதிரொலியாகும். வழக்கமாக இந்தியாவுக்கு வரும் சீன மக்கள் பிஹாரில் இருக்கும் புத்த கயாவுடன் நின்றுவிடும் நிலையில் இனிமேல் மாமல்லபுரத்தின் சிறப்பையும், பாரம்பரியத்தையும் அறிய வருவார்கள்.
வரலாற்று ரீதியாக தமிழகத்துக்கும், சீனாவுக்கும் இடையேயான தொடர்புகளைக் குறித்து அறிய மாமல்லபுரம் வரும்போது, இயல்பாகவே சுற்றுலாவின் சக்கரம் சுழலத்தொடங்கும்
குறிப்பாக இங்குள்ள கடற்கரைக் கோயில், 5 ரதங்கள், கிருஷ்ணர் வெண்ணெய் எடுப்பது, அர்ஜுனன் தபசு ஆகியவை சீனர்களை மட்டுமல்லாமல் சீன அதிபரையும் நிச்சயம் ஈர்க்கும்.