காற்று வீசியதாலேயே பேனர் விழுந்தது; காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்: சுபஸ்ரீ மரணம் குறித்து பொன்னையன் பேட்டி

காற்று வீசியதாலேயே பேனர் விழுந்தது; காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்: சுபஸ்ரீ மரணம் குறித்து பொன்னையன் பேட்டி
Updated on
1 min read

சென்னை

பேனர் விபத்தால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், காற்றின் மீதுதான் வழக்கு தொடுக்க வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பொன்னையன் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அப்போது செய்தியாளர், இந்தியப் பிரதமர் - சீன அதிபர் சந்திப்புக்காக பேனர்கள் வைக்க தமிழக அரசு முனைவதற்கு விளம்பர மோகமே காரணம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறித்துக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பொன்னையன், "இந்த விவகாரத்தில் ஸ்டாலினுக்கு என்ன வயிற்றெரிச்சல்? இந்தியப் பிரதமர் - சீன அதிபர் இருவரும் இரு நாட்டு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காக சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பை ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார். ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகமும் தெரியவில்லை, அரசியல் ஞானமும் இல்லை. பேனர் கலாச்சாரம் ஏற்கெனவே இருக்கிறது. கருணாநிதியும் அதனைக் கடைபிடித்தார். ஸ்டாலினும் கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்," எனத் தெரிவித்தார்.

அப்போது, சுபஸ்ரீ மரணத்துக்குப் பிறகு பேனர்கள் வைப்பது, மக்கள் மத்தியில் அதிமுக மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தாதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஸ்டாலின் பொய் சொல்கிறார், பெரிதுபடுத்துகிறார் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். அப்பெண் வண்டியில் செல்லும் போது, காற்று வீசியதால் பேனர் விழுந்தது. பேனர் வைத்தவரா அதனை தள்ளிவிட்டுக் கொன்றார்? இல்லை. இந்தப் பிரச்சினையில் வழக்கு தொடுக்க வேண்டும் என்றால், காற்றின் மீதுதான் வழக்குப் போட வேண்டும்," என பொன்னையன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in