

சென்னை
மணிரத்னம் மீதான தேச துரோக வழக்கைத் திரும்பப் பெறவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறையைக் கண்டித்தும், பிரதமர் மோடி தலையிடக்கோரியும், கடந்த ஜூலை 23--ம் தேதி இயக்குநர் மணிரத்னம், திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல பெங்கால் திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி உட்பட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர்.
அந்தக் கடிதத்துக்கு எதிராக பிஹார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், " 50 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவது போன்று இருக்கிறது. பிரதமர் மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவதுபோன்று இருக்கிறது. ஆதலால், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி இருந்தார்".
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம்தேதி முசாபர்பூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சூர்ய காந்த் திவாரி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல அன்புமணியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஐஐடி வளாகத்தில் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அன்புமணி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''பிரபலமான 50 நபர்கள், பிரதமருக்குக் கடிதம் எழுதி இருக்கின்றனர், அவ்வளவுதான் அவர்கள் செய்தது. யார் வேண்டுமானாலும் பிரதமருக்குக் கடிதம் எழுதலாம்.
இது ஜனநாயக நாடு. அவர்கள் செய்ததெல்லாம் கடிதம் எழுதி, ஒரு கோரிக்கை வைத்ததுதான். அதிலென்ன தவறு? நிச்சயமாக அந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக முதல்வர் பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இதுதொடர்பாக அவரை விரைவில் சந்தித்துப் பேச உள்ளேன். அங்கே ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளோம். அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால், மக்களைத் திரட்டிப் போராடுவோம்.
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. இன்னும் அதிகமானோர் நீட் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்று சந்தேகப்படுகிறேன்'' என்று அன்புமணி தெரிவித்தார்.