Published : 05 Oct 2019 03:36 PM
Last Updated : 05 Oct 2019 03:36 PM

ஸ்டாலின் பேச்சு நகைச்சுவையாக உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தூத்துக்குடி

"தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் பாஜகவுக்கு என்ன பங்களிப்பு உள்ளதென்று தெரியவில்லை. ஸ்டாலினின் பேச்சு நகைச்சுவையாக உள்ளது" எனக் கூறியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருமண உதவித் திட்டம், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு 2484 பெண்களுக்கு ரூ.9.93 கோடி மதிப்பிலான திருமண உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் நடக்கும் ஆட்சியில் பாஜகவுக்கு என்ன பங்களிப்பு உள்ளதென்று தெரியவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் தன்னிலை அறிந்துதான் பேசுகிறாரா? அல்லது தன்னிலை அறியாமல் பேசுகிறாரா? என்று மக்கள் எள்ளி நகையாடுவார்கள். அவருடைய பேச்சு நகைச்சுவையாக இருக்கிறது.

கடந்த தேர்தலில் 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் 90 இடங்களைப் பிடித்துள்ளார். ஆனால் அதிமுக அரசு யாருடைய ஒத்துழைப்பும், கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

முதல்வர் பதவி ஒன்றுதான் லட்சியம் என்ற கனவோடு ஸ்டாலின் சுற்றிக் கொண்டிருந்தார். அந்த கனவு நனவாகவில்லையென்று, அந்த பதவி மேல் உள்ள வெறியில் அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. இந்த ஆட்சியில் பாஜகவின் பங்களிப்பு என்ன இருக்கிறது. பாஜக எங்களுடைய கூட்டணி கட்சி. ஆட்சியில் யாருடைய பங்களிப்பும் இல்லை என்பது மக்களுக்கு தெரியும். ஸ்டாலினுக்குத் தெரியவில்லை என்று சொன்னால், அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கவே லாயக்கில்லை என்று அர்த்தம்.

மக்களவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு வேறாக அமைந்தாலும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதை மு.க.ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிதற்றி வருகிறார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் வரக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால், உள்ளாட்சி தேர்தல் வரும். அதில், 100 % வெற்றி பெறுவோம்.
உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு முன்பு அதை நிறுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிடுகிறார். அவர் என்ன திட்டமிட்டிருந்தாலும் அதை எல்லாம் தவிடுபொடியாக்கி தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தும், என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x