

சென்னை
ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் பரிசோதித்துப் பார்க்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆலந்தூரில் இன்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில், மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் கராத்தே தியாகராஜன் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ரஜினி ஒரு வாக்கு கொடுத்தால், அதை மீறமாட்டார். 2017-ல் தனியாகக் கட்சி தொடங்குவேன் என்றார்.
அவர் கூறியதுபோல, விரைவில் கட்சியைப் பதிவு செய்வார். தமிழ்நாட்டின் வாக்கு சதவீதமே, சுனாமி போல மாறிவிடும். ரஜினியின் கட்சி பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுக்கும்.
அடுத்த ஆண்டு, ரஜினியின் பிறந்த நாள் இதைவிட பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார்.
கடந்த செப். 15-ம் தேதி, அண்ணா பிறந்த நாள் விழாவில் வைகோ பேசினார். அப்போது தமிழ்நாட்டில் 99% பேர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ரஜினி சொன்னதைப் போல செயல்பட வேண்டும் என்று ஆன்மிக அரசியல் குறித்துப் பேசினார்.
ரஜினியின் ஆன்மிக அரசியல் பாணியை வைகோவை வைத்து ஸ்டாலின் பரிசோதித்துப் பார்க்கிறார்'' என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.