Published : 05 Oct 2019 11:38 AM
Last Updated : 05 Oct 2019 11:38 AM

சிறுபான்மை மக்களுக்காக பிரதமரிடம் கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு: வைகோ கண்டனம்

சென்னை

சிறுபான்மை மக்களைப் பாதுகாத்திடுங்கள் என பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறூப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (அக்.5) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா முழுவதும் நாள்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும், கொல்லப்படுவதையும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு மவுனமாக இருக்கக்கூடாது என்று எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் உள்ளிட்ட 49 பேர் பிரதமருக்கு வெளிப்படையாக கடிதம் எழுதினர்.

2019 ஜூன் 23 ஆம் தேதி, திரைப்பட இயக்குநர் அபர்ணா சென், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா, சமூக ஆர்வலர் ஆசிஷ் நந்தி, ஷியாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், பினாயக் சென், சோமிதோரா சட்டர்ஜி, கொங்கணா சென், சுபா முட்கல், அனுபம் ராய், தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டவர்கள் அக்கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

அக்கடிதத்தில், "வட மாநிலங்களில் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற முழக்கத்தின் பெயரால், சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றார்கள். தலித் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கத்துக்காகவும், பசுவதை என்கிற பெயராலும் மனித உயிர்கள் பலியாகி வருவது மிகுந்த வேதனை தருகின்றது.

தலித் மற்றும் சிறுபான்மையினர் தாக்குவோர் மீது, பிணையில் வெளிவரமுடியாத பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சி என்பது தேசத்துக்கு இணையானது என்று எந்தப் பொருளும் இல்லை. ஆளும்கட்சிக்கு எதிரான கருத்துகளை, தேசத்துக்கு எதிரானதாகக் கருதக் கூடாது. எதிர்ப்புக் கருத்துகளுக்கும் இடம் தருகின்ற நாடுதான் வலிமையானது.

பெரும்பாலான மக்கள் போற்றும் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கத்தை, போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். மேற்கண்ட வன்முறைத் தாக்குதல்கள் குறித்து, நீங்கள் நாடாளுமன்றத்தில் கண்டனத்தைப் பதிவு செய்தீர்கள். ஆனால், அது மட்டும் போதாது. 'ராம்' என்கின்ற பெயர், இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினருக்கு மிகவும் புனிதமானது. அந்தப் பெயரை வன்முறைக்காகப் பயன்படுத்தப்படுதைத் தடுக்க வேண்டும்; அதற்கு பிரதமர் நடவடிகை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.

பிரதமருக்கு இந்தக் கடிதம் தீட்டிய அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் 49 பேர் மீது புகார் கூறி, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பிஹார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், பிஹார் மாநில காவல்துறை பிரதமருக்கு மடல் தீட்டிய 49 பேர் மீதும் தேசத்துரோகம், பொதுத்தொல்லை, மத உணர்வுகளைப் புண்படுத்துதல் மற்றும் சமாதானத்தை மீறும் நோக்கத்துடன் அவமதிப்பது உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

நாட்டில் மத சகிப்புத்தன்மை தொடர வேண்டும்; சிறுபான்மை தலித் மக்கள் மீது மதவாத சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்திக் கொலை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கோரிக்கை வைத்து கடிதம் எழுதியதற்காக, தேசத்துரோக சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

ஜனநாயக நாட்டில், கருத்துரிமையைப் பறிப்பதும், மாற்றுக் கருத்து கூறுவோரை 'தேசத்துரோகிகளாக' சித்தரிப்பதும் பாசிசத்தின் அடையாளம் ஆகும்.

இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். அறிஞர்கள், பல்துறை விற்பன்னர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x