விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏற்ப பயிர்க்கடன் பெற நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை

விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏற்ப பயிர்க் கடன் பெறுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (அக்.5) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏற்ற உதவிகளைச் செய்வதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக மழை பெய்து வருவதும், காவிரியில் தண்ணீர் வருவதும் குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் சுமார் 1.5 லட்சம் ஏக்கரில் நேரடி பாசனம் மூலம் சம்பா சாகுபடி செய்ய நெல் நாற்றுவிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் டெல்டா மாவட்டங்களில் சுமார் 25 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்று வருகிறது.

இப்படி காவிரியில் வரும் தண்ணீரை நம்பி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளும், காவிரி பாசனம் இல்லாத பிற பகுதிகளில் குறிப்பாக மணப்பாறை, மருங்காபுரி, துறையூர், முசிறி போன்ற மாவட்டங்களில் சுமார் 50 ஏக்கரில் கிணறு, போர்வெல் மூலம் சம்பா சாகுபடியைச் செய்யும் விவசாயிகளும் தண்ணீர் கிடைத்தும் பயிர்க்கடன் மற்றும் பயிர் சாகுபடிக்கான அடங்கல் சான்று கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளின் மூலம் விவசாயக் கடன் கிடைக்க வேண்டுமென்றால் பயிர் சாகுபடிக்கான சான்று முறையாக கிடைக்க வேண்டும். இந்தச் சான்றை கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலத்திற்கு ஏற்ப காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும். பயிர் சாகுபடிக்கான சான்று கிடைத்து, விவசாயக் கடன் கிடைத்தால் மட்டுமே சம்பா சாகுபடி செய்ய முடியும் என்ற நிலையில் விவசாயிகள் காத்துக்கிடக்கிறார்கள்.

இந்நிலையில் விவசாயக் கடன் கிடைக்கவில்லை என்றால் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்யக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். ஏற்கெனவே தமிழக அரசு கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க் கடனாக ரூபாய் ஆயிரம் கோடி வழங்குவதாகவும், மத்திய அரசு பயிர்க் கடனாக ரூபாய் 12 லட்சம் கோடி வழங்குவதாகவும் அறிவிப்பு வெளியிட்டும் அதன் பயன் முழுமையாக விவசாயிகளுக்குச் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சூழலில் விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைத்தும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டாலும், பயிர்க் கடன் உள்ளிட்ட பிற வசதிகளும் இப்போதே கிடைத்தால் தான் இந்த ஆண்டில் சம்பா சாகுபடியில் சுமார் 120 லட்சம் டன் மகசூல் பெறலாம்.

எனவே, தமிழக அரசு விவசாயிகளுக்கு நீர் பாசனம் முறையாக கிடைக்கவும், விவசாயக் கடன் கிடைக்கவும், அடங்கல் சான்று கிடைக்கவும், உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in