Last Updated : 05 Oct, 2019 10:25 AM

 

Published : 05 Oct 2019 10:25 AM
Last Updated : 05 Oct 2019 10:25 AM

விக்கிரவாண்டியில் வெல்லப்போவது யார்? வேட்பாளர்களின் பலம், பலவீனம் என்னென்ன?- கள நிலவரம்

பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி.

விழுப்புரம்

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர்.

இதில் அதிமுக, திமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் 44 சதவீதம் வன்னியர் இன மக்களும், 30 சதவீதத்தினர் தலித் மக்களும், 26 சதவீதம் பிற சாதி, மதத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 2,23,387 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலம், பலவீனம், பிரச்சார உத்தி உள்ளிட்டற்றை இரு கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளிடம் கேட்டபோது கிடைத்த தகவல்கள்.

திமுக வேட்பாளர் புகழேந்தி

பலம்
* ஏறக்குறைய 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் அறிமுகமானவர்.

* பெரும்பான்மை வாக்கு வங்கியாக உள்ள வன்னியர் இனத்தைச் சார்ந்தவர்.

* கடந்த தேர்தல்களில் திமுக, பாமகவுடன் கூட்டணி வைத்தபோது பாமகவினருடன் நன்கு அறிமுகமானவர்.

* மிகவும் எளிமையாகப் பழகக்கூடியவர்.

* இவர் யாரென்று எந்த அரசியல் கட்சி நிர்வாகியும் கேட்க முடியாது. வன்னியர்கள் அனைவரும் பாமகவினர் இல்லை என்பதும் கூடுதல் பலம்.

பலவீனம்
* இத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த திமுக நிர்வாகிகள் உள்ளரசியல் செய்ய வாய்ப்புண்டு.

* இம்மாவட்டத்தில் திமுகவில் இருந்த வன்னியத் தலைவர்களை ஓரங்கட்டியதால் வன்னியர்களுக்கு உள்ள பொன்முடி மீதான தனிப்பட்ட வெறுப்பு.

*தலித் மக்கள் அனைவரும் மக்களவைத் தேர்தல் போல திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்பதை உறுதியிட்டுச் சொல்லமுடியாத நிலை.

* விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்தவர்.

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன்

பலம்
*விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்தவர்.

* சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் ஒன்றியச் செயலாளர் ஆனவர்.

* காணை ஒன்றியம் முழுவதும் அறிமுகமானவர்.

* பெரும்பான்மை இனமான வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

பலவீனம்
* இத்தேர்தலில் வாய்ப்பு கேட்டு விருப்ப மனுத்தாக்கல் செய்த விக்கிரவாண்டி ஒன்றியச் செயலாளரான வேலு, பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி.லட்சுமணன், தொழிலதிபர் ஏ.கே.சுப்பிரமணியன் ஆகியோரை இன்னமும் ஒருங்கிணைக்காமல் இருப்பது.

* விக்கிரவாண்டி தொகுதியில் அறிமுகம் இல்லாதவர்.

* கூட்டணிக்கட்சியில் உள்ள கடைக்கோடி நிர்வாகியின் பகுதிக்குச் செல்லும்போது அவரின் பெயரைக்கூட தெரிந்துவைத்துக் கொள்ளாமல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது.

திமுக பிரச்சார வியூகம்
திமுகவில் எம். ஆர்.கே பன்னீர் செல்வம், எ.வ.வேலு, அ.ராசா, ஜெகத்ரட்சகன், தா.மோ. அன்பரசன் ,டி எம் செல்வகணபதி, விஜயன், கிருஷ்ணசாமி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கும் பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓவ்வொரு தலைவரும் தன்னுடன் சுமார் 200 திமுக நிர்வாகிகளுடன் களத்துக்கு வந்து அப்பகுதி ஒன்றிய நிர்வாகியுடன் நெருக்கமாகப் பழகி, ஆதரவு கேட்டுச் செல்லும் திமுக கிளை செயலாளர்கள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், வளைக்க முயற்சிக்கும் எதிர் கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளை கலைஞர் பாணியில் பெயர் சொல்லி அழைப்பது என தெளிவான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை வளைக்கும் சாதுர்யம் என வெற்றி ஒன்றே குறிக்கோள் என ஓடிக்கொண்டுள்ளனர்.மேலும் திமுக கூட்டங்களில் பாமகவை விமர்சிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும் ஹெல்மெட் வழக்கு பதிவு செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், எங்களுக்கு வாக்களித்தால் நாங்கள் அதைப் பார்த்துகொள்கிறோம் என்றும் சொல்லி வருகிறார்கள்.

அதிமுக பிரச்சார வியூகம்
அதிமுகவில் தேர்தல் பணி என்று வந்துவிட்டால் ஸ்கெட்ச் போட்டு பணிகளைத் தொடங்குவதில் வல்லவர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணன் என்று திமுகவினரே ஒப்புக்கொள்வார்கள். விபத்தில் சிக்கிய தன் மகனின் சிகிச்சைக்கு உடன் இருந்த சி.வி.ராதாகிருஷ்ணன், அதை விடுத்து தேர்தலுக்காக தொகுதிக்கு வந்துள்ளார்.

சி.வி.ராதாகிருஷ்ணனின் திட்டப்படி அவரின் ஆட்கள் திமுக, விசிகவில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளைச் சந்தித்து பேசி வருகின்றனர். 'எங்களுக்கு வாக்கு கேட்கவேண்டாம். உங்கள் கட்சியின், கூட்டணிக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு கேட்காமல் ஒதுங்கிக் கொள்ளுங்கள்; நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்று சொல்லி வருகின்றனர்.

மேலும் 'ஒதுக்கப்பட்ட பகுதியில் யார் எந்த நிர்வாகி அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றுத் தருகிறீர்களோ அவர்களுக்கே மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் என்று அதிமுக, பாமக, தேமுதிக நிர்வாகிகளிடம் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்ற பின்பே அதிமுக அமைச்சர்கள் தொகுதிக்கு வருகை தருவார்கள். அதுவரை அதிமுக தீவிர பிரச்சாரத்தைக் கையிலெடுக்கவில்லை.

தற்போதை நிலவரப்படி திமுக அசுர வேகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. அதிமுக இன்னமும் பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை என்றே சொல்லலாம். இத்தேர்தலில் போட்டியிடுவது புகழேந்தியும், முத்தமிழ்ச் செல்வனும் அல்ல. பொன்முடியும், சிவி சண்முகமும் இதில் பெறும் வெற்றியே இவர்களின் அரசியலை முன்னெடுத்துச் செல்லும் என்பதே நிதர்சனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x