

என்.சன்னாசி
மதுரை
தமிழக காவல் துறையில் டிஜிபி முதல் காவலர்கள் வரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். காவல் துறையின் தொடக்கக் காலத்தில் இருந்த பணி யிட எண்ணிக்கை முறையே தற் போதும் பின்பற்றப்படுகிறது. அடிக் கடி காவலர்கள் தேர்வு நடந்தாலும், தொடர்ந்து காலியிடம் உள்ளது.
அரசு அதிகாரிகள், ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. ஆனால் காவல் துறையில் மட்டும் பழைய எண்ணிக்கையை தொடர் வதால் வார விடுமுறை இன்றி பணிச் சுமையால் மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையில் பாதிக்கப் படுகிறோம் என்று காவல் துறையினர் நீண்ட நாளாகவே வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தை ஏற்கெனவே 16 மாவட்டங்களாகப் பிரித்தபோது, காவல் துறையில் சட்டம், ஒழுங்கு குற்றப்பிரிவில் இருந்த எண்ணிக்கையே இன்றைக்கும் தொடர்கிறது. தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் (பட்டாலியன்) மட்டும் 7-ல் இருந்து 22 படையாக அதிகரித்துள்ளது. இதில் 15,000 காவலர்கள் கூடுதலாக உள்ளனர்.
32 மாவட்டத்தில் இருந்து 40 மாவட்டம் வரை அதிகரிக்கும் சூழலில் மாவட்ட நிர்வாகம், நீதித் துறை, கல்வி போன்ற அரசின் பிற துறைகளில் புதிய காலியிடம் தோற்றுவித்து நியமிக்கப்படுகின்றனர். காவல் துறையில் மட்டும் பழைய காலத்து எண்ணிக்கை முறையையே பின்பற்றுகின்றனர்.
பணிச்சுமையால் மன உளைச் சலுக்கு காவலர்கள் ஆளாகின்றனர். 24 நேர பணியால் குடும்பங்களை கவனிக்க முடியாமல் பலர் சிரமத் துக்கு தள்ளப்படுகின்றனர். காவல் துறையில் மன அழுத்தம் போக்கு நிறைவு வாழ்வு பயிற்சி அளித்தாலும், வார விடுமுறை, ஒரு நாளுக்கு ஒரு அலுவல், நிலை உயர்வை தவிர்த்து பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது. இக்கோரிக்கைகள் முதல்வரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்ல சிறப்புக் குறைதீர் முகாம் மாவட்டம்தோறும் அந்தந்த அமைச்சர்கள் தலைமையில் நடத்தி மனுக்களைப் பெறலாம். இது போலீஸாரின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.