

நாகப்பட்டினம்
580 கிராம் எடையுடன் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்து, 147 நாளில் 2 கிலோ 200 கிராம் எடையுள்ள குழந்தையாக வளர்த்து நாகை அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாகை சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது மனைவி லதா. கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த மே 10-ம் தேதி நாகை அரசு மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் 580 கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தது. இதையடுத்து, குழந்தைகள் மருத்துவ பிரிவின் தலைமை மருத்துவர் ஜெயச்சந்திரன் தலைமையிலான மருத்துவர்கள், அந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்து 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 147 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த குழந்தை தற்போது 2 கிலோ 200 கிராம் எடையுடன் ஆரோக்கியமான குழந்தையாக உள்ளது.
இதுகுறித்து தலைமை குழந்தைகள் மருத்துவர் ஜெயச்சந்திரன் கூறியதாவது: குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த குறைந்த எடையுள்ள குழந்தைக்கு மூச்சு விடுதல், விழுங்குதல் போன்ற எந்த செயலும் தெரியாது. அந்த குழந்தைக்கு செயற்கை முறையில் சுவாசம் அளிப்பதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்தோம். அதற்கு பலன் கிடைத்துள்ளது. தற்போது குழந்தை முழு சுகம் பெற்று வீடு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் உடல் எடை குறைவாக பிறந்து குறைப்பிரசவத்தில் காப்பாற்றப்பட்ட 3-வது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.