Published : 05 Oct 2019 08:54 AM
Last Updated : 05 Oct 2019 08:54 AM

கும்பகோணத்தில் குப்பை அள்ளுவதற்காக ரூ.80 லட்சத்தில் வாங்கப்பட்டு 8 மாதங்களாக இயக்கப்படாததால் வீணாகும் 55 வாகனங்கள்: உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தல்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சத்தில் வாங்கப்பட்டு 8 மாதங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குப்பை அள்ளுவதற்கான பேட்டரியில் இயங்கும் வாகனங்கள்.

வி.சுந்தர்ராஜ்

கும்பகோணம்

கும்பகோணம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 55 குப்பை அள்ளும் வாகனங்கள் கடந்த 8 மாதங்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் வீடுகள், தங்கும் விடுதி கள், ஹோட்டல்கள் ஆகியவற்றி லிருந்து நாள்தோறும் 70 டன் கழிவுகள் வெளியேறுகின்றன. இந்தக் கழிவுகளைச் சேகரிக்கும் துப்புரவுப் பணி நகராட்சியால் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தி லேயே சிறந்த நகராட்சியாக 2014-ம் ஆண்டு முதலிடத்தையும், தூய்மையைக் கடைபிடிப்பதில் இந்திய அளவில் மூன்றாமிடத்தை யும் கடந்த பிப்ரவரி மாதம் கும்ப கோணம் நகராட்சி பெற்றது. இதற்காக விருதுடன், ரூ.5 லட்சத் துக்கான காசோலையையும் மத்திய அரசிடமிருந்து கும்பகோணம் நகராட்சி பெற்றது.

இதையடுத்து, குப்பையை மக்கும் குப்பை, மக்கா குப்பை என வீடுகளிலேயே பிரித்து வழங்குவோருக்கு மாதந்தோறும் ஊக்கப்பரிசு வழங்கும் திட்டமும் கடந்த ஆண்டு நகராட்சியால் அமல்படுத்தப்பட்டது. மேலும், நகராட்சி சார்பில் அவ்வப்போது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்நிலையில், குப்பை அள்ளும் வாகனங்களில் இருந்து புகை வெளியேறுவதைத் தடுத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், குப்பை அள்ளுவ தற்காக பேட்டரியில் இயங்கும் வகையிலான 55 வாகனங்கள் ரூ.80 லட்சத்தில் கும்பகோணம் நகராட்சியால் 8 மாதங்களுக்கு முன் வாங்கப்பட்டன. இந்த வாகனங்கள் கும்பகோணம் புதிய மீன் மார்க்கெட் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதி புல், பூண்டுகள் முளைத்து புதர் போல மாறியுள்ளது.

கடந்த 8 மாதங்களாக பயன் பாடின்றி நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனங்களின் பேட்டரிகள் பழுத டைந்து வீணாகும் நிலையில் உள்ளன.

இதுகுறித்து முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் முருகன் கூறியபோது, ‘‘400 வீடுகளுக்கு ஒரு வாகனம் என இந்த 55 குப்பை அள்ளும் வாகனங்கள் வாங்கப் பட்டன. வீடுகளில் சேகரமாகும் குப்பையை இந்த வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள குப்பையைத் தரம்பிரிக்கும் கூடத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. வாங்கி 8 மாதமாகியும் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் பேட்டரி வாகனங்கள் வீணாகி வருகின்றன. போதிய வருவாய் இல்லை எனக் கூறி வரிவிதிப்பை அதிப்படுத்தி வரும் நிலையில், இதுபோன்று செலவழித்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகிறது நகராட்சி நிர்வாகம்” என்றார்.

மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை

8 மாதங்களாக பயன்பாடின்றி குப்பை அள்ளும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தைப் பார்வையிட்ட மயிலாடுதுறை எம்.பி செ.ராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுப.தமிழழகன், திமுக மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், வாகனங்களின் நிலை குறித்து பார்வையிட்டனர்.

பின்னர், இந்த வாகனங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இப் பிரச்சினை குறித்து விளக்கம் பெறுவதற்காக கும்பகோணம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெகதீசனை தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் இணைப்பு கிடைக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x