

சென்னை
தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் கோயம்பேடு உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
இந்த ஆண்டில் ஆயுதபூஜை வரும் 7-ம் தேதியும் 8-ம் தேதி விஜயதசமியும் வருகிறது. அதற்கு முன்னதாக சனி, ஞாயிற்றுக் கிழமை என 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். பொதுமக்களின் வசதிக் காக சென்னையில் கோயம்பேடு, மாதாவரம், கே.கே.நகர், தாம் பரம், பூந்தமல்லி பேருந்து நிலை யங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,225 பேருந்து களோடு கூடுதலாக 930 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க நீண்ட தூரத்துக்கு மக்கள் வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். நெரிசல் காரணமாக பலர் படிகளில் அமர்ந்தபடியே பயணம் செய்தனர். கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நேற்று மாலையில் அதிகமாக இருந்தது. பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகளிலும் வழக்கம் போல் கூடுதல் கட்டணத்தை வசூ லித்தனர்.
போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தொடர் விடுமுறையை முன்னிட்டு முதல் நாளான நேற்று மாலை முதல் பயணிகள் வரவர சிறப்பு பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டன. இதேபோல், இன்றும் 765 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பண்டிகை முடிந்தபிறகும் மக்கள் சென்னைக்கு திரும்பி வர வசதியாக போதிய அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்குவோம்’’ என்றனர்.