இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் அதிகபட்சம் தென்மேற்கு பருவக்காற்று விலகத் தொடங்குவதில் தாமதம்: அக்டோபர் 20 வாக்கில் வடகிழக்கு பருவக்காற்று வீசும்

இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் அதிகபட்சம் தென்மேற்கு பருவக்காற்று விலகத் தொடங்குவதில் தாமதம்: அக்டோபர் 20 வாக்கில் வடகிழக்கு பருவக்காற்று வீசும்
Updated on
2 min read

ச.கார்த்திகேயன்

சென்னை

இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இல்லாத வகையில் தென்மேற்கு பருவக் காற்று விலகத் தொடங்குவது தாமதமாகியுள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இயல்பை ஒட்டியே இருக் கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வடகிழக்கு பருவ மழை பொழிய தென்மேற்கு பருவக் காற்று விலக வேண்டும். அது தற்போது தாமதமாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 148 ஆண்டுகால வானிலை வரலாற் றில் இல்லாத தாமதமாகும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:

இந்த ஆண்டு நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை வழக் கத்தைவிட அதிகமாக பெய்துள் ளது. கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் வழக்கத்தை விட, நீண்டகால சராசரி அளவின்படி 10 சதவீதம் கூடுதலாக அதாவது 88 செமீ மழை கிடைத்துள்ளது. கடந்த 1994-ம் ஆண்டுக்கு பிறகு, இந்த அளவு மழை பெய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 36 வானிலை ஆய்வு மையங்களில் பதிவான அளவுகளின்படி, 2 இடங்களில் வழக்கத்தைவிட மிக அதிக மழை பெய்துள்ளது. மேலும், 10 இடங்க ளில் அதிக மழையும் 19 இடங்க ளில் வழக்கமான அளவு மழையும் 5 இடங்களில் வழக்கத்தை விட குறைவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த 50 ஆண்டுகால தரவுக ளின் சராசரி அடிப்படையில் தென்மேற்கு பருவக்காற்று வழக்க மாக ராஜஸ்தான் பகுதியில் இருந்து செப்டம்பர் 1-ம் தேதி வாக் கில் விலகத் தொடங்கும். பின்னர் படிப்படியாக டெல்லி, ஆந்திரா என விலகி, தமிழகத்தில் விலகும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி வாக்கில்தான், ராஜஸ் தானில் இருந்து விலகக் தொடங் கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 1961-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதியும் 2007-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியும் விலகத் தொடங்கியதே அதிகபட்ச தாமதமாக உள்ளது. இப்போது விலக இருப்பது, இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இல்லாத தாமதமாகும்.

தற்போது பிஹார் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமா கவே, தென்மேற்கு பருவக்காற்று உயிர்ப்புடன் இருந்து வருகிறது. அது வலுவிழக்கத் தொடங்கியதும் தென்மேற்கு பருவக்காற்று விலகத் தொடங்கும். அதன் தொடர்ச்சி யாக தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதக மான சூழல் ஏற்படும். இம்மாதம் 20-ம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவக்காற்று வீசத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

148 ஆண்டு வானிலை விவரம்

இந்தியாவில் முதல்முறையாக கடந்த 1792-ம் ஆண்டு சென்னை யில் வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1875-ம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மைய தலைமையகம் கொல்கத்தாவில் தொடங்கப்பட் டது. அங்கிருந்து நாடு முழுவதும் பதிவாகும் மழை, வெயில், குளிர் தொடர்பான விவரங்கள் தொகுக்கப்பட்டன. பின்னர் சிம்லா, புனேவுக்கு தலைமையகம் மாற்றப் பட்டு, இறுதியில் புதுடெல்லியில் நிறுவப்பட்டது. இம்மையம் சார் பில் கடந்த 148 ஆண்டுகளாக நாடு முழுவதுக்குமான வானிலை விவரங்கள் சேகரித்து பதிவு செய் யப்பட்டு, அதனடிப்படையில் வானிலை கணிப்புகள் வெளியிடப் பட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in