

தமிழகம் முழுதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் முகவரி, பெயர் மாற்றம், சேர்த்தல் உள்ளிட்ட விபரங்களை எப்படி செய்வது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி
“தமிழ்நாட்டில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல், 2019 தொடர்புடைய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பதிவு அலுவலரால் வெளியிட மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதை அடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
மேற்கண்ட வாக்காளர் பட்டியல்களின் வரைவு பட்டியலை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் http://www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் முதலில் அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்களை சேர்க்க வேண்டும்.
அதற்கு அவர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது தொடர்புடைய இணையதளத்திலோ (online)சென்று அவர்களது பெயர்களை சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.
இணையதளம் மூலம் பெயர் சேர்க்க விரும்புவோர் தங்களது பெயர் மற்றும் இதர விவரங்களை http://wwww.nvsp.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது”.
இவ்வாறு மாநில தேர்தல் ஆணைய செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.