

சென்னை
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு வளரும் இடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அலட்சியமாக இருந்தவர்களிடமிருந்து ரூ.32,74,700/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் (பொ) லலிதா, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆணையாளர் (பொ) லலிதா, இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வீடுகள் 2,056 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமாராக 500 வீடுகளாக வரையறுக்கப்பட்டு, வாரந்தோறும் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த ஒரு பணியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தினந்தோறும் ஒருங்கிணைந்த நோய்கள் கண்காணிப்பு திட்டம் மூலம் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெறப்படும் டெங்கு காய்ச்சலினால் சிகிச்சை மேற்கொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை மண்டல வாரியாக மேல்நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலத்திலிருந்து சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரங்களும், அந்தந்த மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இத்திட்டத்தின்மூலம் நாள்தோறும் முறையே தெரிவிக்கப்படுகிறது.
மேலும், காய்ச்சல் கண்டவர்களை களப்பணியாளர் மூலம் கண்டறியப்பட்டு, பெருநகர சென்னை மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, அந்த நோயாளிகள் மற்றும் குடும்பத்தினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அந்தப் பகுதியில் மருந்து தெளித்தும், புகைப்பரப்பும் பணி மற்றும் அருகிலுள்ள வீடுகளில் கொசு உற்பத்தியாகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, டெங்கு நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள், புதிய கட்டுமான பணி இடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து ஆய்வு செய்யப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான இரயில் நிலையங்கள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், அங்காடிகள், உணவு விடுதிகள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு அங்கே கொசுப்புழு வளரும் இடங்கள் அழிக்கப்படுகின்றன. தற்போது பருவமழையை முன்னிட்டு நன்னீர் குளங்கள், நன்னீர் தேக்கங்கள் போன்ற இடங்களில் கொசுப்புழுக்களை உண்ணும் கம்புசியா மீன்கள் விடப்பட்டுள்ளன.
பள்ளிகளில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுற்றுப்புறத்தினை சுத்தமாக வைத்திருத்தல், தன்சுத்தம் குறித்த சுகாதார கல்வி மற்றும் கை கால்களை சுத்தமாக கழுவுதல், வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது காலணி அணிந்து செல்லுதல் போன்ற விழிப்புணர்வு கல்வி பொது சுகாதாரத்துறையினாரால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. குடியிருப்பு நலச் சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் சிகிச்சை சம்பந்தமாக அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கொசுக்கள் உற்பத்தியாவதற்கு முக்கிய ஆதாரங்களாக இருக்கும் டயர்கள், தேவையற்ற பிளாஸ்டிக் கலன்கள் முதலியவை துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன. நலப்பணியாளர்கள், ரோட்டரி சங்கங்கள், செவிலியர்கள், மாணவியர்கள், கல்லூரி மாணவர்கள் மூலமும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து, கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு இதுவரை அபராதத் தொகையாக ரூ.32,74,700/- விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நாள் வரை 8,929 புதிய கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு டெங்கு பரவாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை, 387 அரசு/பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் 652 தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து, கொசுப்புழு வளராதவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 1,665 அரசு கட்டிடங்களை ஆய்வு செய்து டெங்கு கொசு வளராமல் தடுக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மண்டல வாரியாக 808 பூட்டிகிடக்கும் வீடுகளை அடையாளம் கண்டறிந்து, வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி, அங்கு கொசுப்புழு வளருகின்றனவா என ஆய்வு மேற்கொண்டு டெங்கு மற்றும் கொசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்மா உணவகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் இலவசமாக நிலவேம்பு கசாயம் நாள்தோறும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் இதுவரை 25,334 காலிமனையிடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்கு தேங்கியுள்ள உபயோகமற்ற பொருட்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மேற்கூறிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 3,043 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
டெங்கு நோய் மற்றும் கொசு தடுப்பு பணியில் 395 கைத்தெளிப்பான்கள், 16 விசைத்தெளிப்பான்கள், 227 பெரிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், 22 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், 39 புகைப்பரப்பும் வாகனம் மூலம் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இப்பணியினை 1 முதல் 15 மண்டலங்களில் பணிபுரியும் மண்டல நல அலுவலர்கள், பூச்சியியல் வல்லுநர்கள், துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் களப்பணியாளர்கள் கொசு தடுப்பு பணியினை செவ்வனே மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இதுவரை 993 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில், 531 காய்ச்சல் கண்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் பணிபுரியும் களப்பணியாளர்கள் தினந்தோறும் ஆய்வறிக்கையினை, அந்தந்த மண்டலங்களின் பூச்சியியல் வல்லுநர்களிடம் சமர்ப்பித்து கொசு தடுப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். கொசு தடுப்பு பணி குறித்து வாரந்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த ஒரு மாத காலமாக வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஆங்காங்கே மழைநீர் தேங்கும் இடங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற அட்டவணை தயாரிக்கப்பட்டு, மண்டலம் 1 முதல் 15 வரை கொசு தடுப்பு பணி செவ்வனே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தில் 96 டெங்கு காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக உள்ளனர் ”
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையாளர் (பொ) ஆர்.லலிதா, தெரிவித்துள்ளார்.