

காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சாலையில் கிடந்த 52 பவுன் நகைகளை மீட்டு போலீஸார் மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்த தொழிலாளர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
காரைக்குடி அருகே மானகிரியைச் சேர்ந்த ஆரோக்கிய செல்வகுமார் , மரியராணி தம்பதியினர் கைக்குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் இன்று காலை காளையார்கோவிலுக்குச் சென்றனர். மேலும் மரியராணி 52 பவுன் நகைகள் உள்ள பையை கையில் வைத்திருந்தனர். கல்லல் பாலம் அருகே சென்றபோது அந்த பையைத் தவறவிட்டார்.
அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லலைச் சேர்ந்த பிளம்பர்கள் சபரிவாசன், மில்லர், கருப்பையா சாலையில் கிடந்த நகைப் பையை எடுத்தனர். பிறகு அந்த பையை கல்லல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில் காளையார்கோவில் சென்ற ஆரோக்கிய செல்வகுமார் , மரியராணி தம்பதியினருக்கு நகை பை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீண்டும் கல்லல் வரை நகைப்பையை தேடி சென்றனர்.
பை கிடைக்காதநிலையில் கல்லல் போலீஸாரிடம் புகார் கொடுக்க சென்றனர். அவர்களிடம் தவறவிட்ட நகைகளை பிளம்பர்கள் ஒப்படைத்தது குறித்து போலீஸார் தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த தம்பதியினர் பிளம்பர்களை பாராட்டினர். மேலும் அந்த தொழிலாளிகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.