Published : 04 Oct 2019 05:54 PM
Last Updated : 04 Oct 2019 05:54 PM

கமல்ஹாசன் தோப்புக்கரணம் போட்டாலும் ஆட்சிக்கு வரப்போவதில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை

கமல்ஹாசன் தோப்புக்கரணம் போட்டாலும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று (அக்.4) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே?

இதுகுறித்து மத்திய அரசுதான் விளக்கமளிக்க வேண்டும். இது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயமில்லை. பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.

அதிமுக எம்எல்ஏ இன்பதுரை வெற்றியை எதிர்த்த வழக்கு அதிமுகவுக்குப் பின்னடைவா?

அனுமானத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. முறையாக தேர்தலை எதிர்கொண்டோம். தேர்தல் ஆணையம் எங்கள் வெற்றியை முறையாக அறிவித்தது. இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. பின்னடைவு ஏற்படும் நிலை வராது. வாக்குகளை எண்ணி முடிப்பதற்கு முன்னர் என்னால் கருத்து சொல்ல முடியாது. இன்பதுரைக்கு தேர்தல் ஆணையம் தான் வெற்றிச் சான்றிதழைக் கொடுத்தது.

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பேனர்கள் வைப்பதை கமல்ஹாசன் விமர்சித்துள்ளாரே?

சர்வதேச அளவில் இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. மற்றவர்களை வரவேற்பது தமிழர் பண்பாடு. சட்டத்தை மதிப்பதால்தான் நீதிமன்றத்தை அணுகி, தகுந்த உத்தரவை பெற்றுள்ளோம். மக்களுக்கு இடர்ப்பாடு இல்லாமல் பேனர்கள் வைப்போம்.

அதிமுக சமூகத்திற்கு தேவையில்லாதது என கமல் விமர்சித்துள்ளாரே?

சமூகத்திற்கு என்ன தேவை என்பதை கமல் முடிவு செய்ய முடியாது. மக்கள்தான் அதனைத் தீர்மானிக்க வேண்டும். அதிக ஆண்டுகள் அதிமுக தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறது. இனியும் அதிமுகதான் ஆளும். நாங்கள் 100 நாட்கள் ஆட்சி செய்தோம் என வைத்துக்கொண்டால், திமுக 60 நாட்கள்தான் ஆட்சி செய்தது. கமல்ஹாசன் என்ன விமர்சனம் செய்தாலும், தோப்புக்கரணம் போட்டாலும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. மக்களவைத் தேர்தலிலேயே அவருக்கு உள்ள சக்தியை மக்கள் காண்பித்துவிட்டார்கள். அதிமுக அரசை எதிர்த்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்பதால் அவர் விமர்சிக்கிறார்.

கண்டலேறுவிலிருந்து பூண்டி வரை குழாய் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தால் ரூ.3000 கோடி விரயமாகும் என துரைமுருகன் தெரிவித்துள்ளாரே?

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர், ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமாராவ் ஆகியோர் ஏற்படுத்தியது. இதன்மூலம் சென்னைக்குத் தண்ணீர் வருவதற்குக் காரணம் எம்ஜிஆர் போட்ட விதை. அந்த விதை விருட்சமாகி, சென்னை மாநகர மக்களுக்கு 8 டிஎம்சி தண்ணீர் கிடைக்கிறது. அப்போது எந்த தண்ணீர் பிரச்சினையும் இல்லை. இப்போதுதான் இந்தத் திட்டம் அவசியமாகிறது.

தேமுதிக - அதிமுக கூட்டணியை முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சித்துள்ளாரே?

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பரும் இல்லை. எங்களுக்கு பிரதான எதிரி, தீயசக்தி என எம்ஜிஆர் ஒருவரை அடையாளம் காட்டியிருக்கிறார். உங்களுக்கே அவர் யார் என தெரியும். மறைந்த அவரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. மற்ற யாரும் எங்களுக்கு எதிரி இல்லை. திமுகதான் எங்களுக்கு பிரதான எதிரி. மற்றவர்கள் எதிரி கிடையாது.

இந்திக்காக தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளாரே?

நம் மாநிலம் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறது. மூன்றாவது மொழிக்கு இடமில்லை. விருப்பப்படுபவர்கள் இந்தி கற்றுக்கொள்ளலாம். இந்தி பிரச்சார சபா இருக்கிறது. ஆனால், மொழியைத் திணிக்க முடியாது. இல.கணேசன் அவர் கட்சியின் நிலைப்பாட்டைச் சொல்கிறார். அவர் அப்படித்தான் சொல்லியாக வேண்டும். எங்களின் மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்வோம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x