Published : 04 Oct 2019 04:54 PM
Last Updated : 04 Oct 2019 04:54 PM

14 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் ஒரே ஒரு இடைத்தரகர்தான் சிக்கினாரா?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி 

சென்னை

நாடு முழுவதும் 14 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் ஒரே ஒரு நபர்தான் சிக்கினாரா? அரசு அதிகாரிகள் உதவியில்லாமல் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்த உயர் நீதிமன்றம், வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 260 இடங்களில் 53 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 207 இடங்களையும் தமிழக அரசு அந்தந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களிடமே ஒப்படைத்துவிட்டன.

எனவே, இந்த மருத்துவ இடங்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்தி தகுதியானவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த தீரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் 25-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

நீதிபதிகள் அமர்வு எழுப்பிய கேள்விகள்:

(1) எத்தனை பேர் ஆள் மாறாட்டம் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்?

(2) நீட் தேர்வு எழுதியவர்களின் அடையாளம், மாணவர் சேர்க்கை பெற்றவர்களின் அடையாளத்தைச் சரிபார்த்தார்களா?

(3) ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி தொடர்பாக வேறு வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதா?? பதிவு செய்யப்பட்டுளாதா?

(4) தேனி மாணவர் குறித்த விசாரணையின் நிலை என்ன?

(5) மோசடி மூலம் மாணவர் சேர்க்கை பெற்றுள்ளார் எனத் தெரிந்தும் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா?

(6) நீட் தேர்வுக்கு மாணவரை சோதித்து அனுப்பியது முதல் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதா?

(6) இரட்டை இருப்பிடச் சான்று அளித்து மாணவர் சேர்க்கை பெற்றது போல வேறு வகையில் மோசடியாக மாணவர் சேர்க்கை பெற்றுள்ளனரா என கண்டறியப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஆஜராகி அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த 2 மாணவர்களும், நிகர்நிலை பல்கலைகழகங்களைச் சேர்ந்த 3 பேரும், இடைத்தரகராகச் செயல்பட்ட ஒருவரும் சிபிசிஐடி விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அரசின் இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், நாடு முழுவதும் 14 லட்சம் பேர் நீட் தேர்வெழுதிய நிலையில் ஒரு இடைத்தரகர் மட்டும் தான் சிக்கியுள்ளாரா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், அரசு அதிகாரிகளின் துணையில்லாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிவதில் அரசு விழிப்புடனும், கவனத்துடனும் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

பின்னர் இந்த வழக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, தமிழக சுகாதாரத் துறை, தமிழக டிஜிபி, தமிழக சிபிசிஐடி ஆகியோரை தாமாக முன்வந்து இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்து உத்தரவிட்டனர்.

மேலும், எத்தனை மாணவர்கள் நீட் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், எவ்வளவு தொகை பரிமாற்றம் நடந்துள்ளது, எந்தெந்த அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களை சிபிசிஐடி அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x