

சென்னை
இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (அக்.4) வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் 2014-ல் ஆட்சி அமைந்த பிறகு, தொடர்ந்து இந்து தேசியவாதிகள் என்ற போர்வையில் பிற மதத்தினர் மீது தாக்குதல் தொடுப்பது, படுகொலை செய்வது என்று வன்முறை வெறியாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தேவாலயங்கள் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் சிறுசிறு தாக்குதல்கள் நடைபெற்றிருந்தாலும், முஸ்லிம்கள் அதிக அளவில் குறி வைத்து தாக்கப்பட்டனர். கருணையே இல்லாமல் கொலை செய்யப்பட்டனர்.
இந்துத்வா பிரச்சாரத்தில் பெரும் கூட்டம் ஈடுபட்டுள்ளது. சமூக வலைதளங்களின் மூலம் சிறுபான்மையினர் மீது அவர்கள் திட்டமிட்டே வெறுப்பை வளர்த்து வருகின்றனர். இதற்காகவே பல்வேறு புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு மோசமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய தாக்குதல்களை பாஜக தலைவர்கள் கண்டு கொள்வதில்லை. காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்வதில்லை.
பாஜக ஆட்சியில் பெருகி வரும் சகிப்பின்மை காரணமாக கும்பல் வன்முறையினால் தாக்குதல்கள், படுகொலைகள் நடைபெற்று வருவதை பிரதமர் நரேந்திர மோடிக்கு உணர்த்தும் வகையில் 49 பிரபலமானவர்கள் பகிரங்கமாக கடிதம் எழுதினர். இதில், பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் ஷ்யாம் பெனகல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, நடிகை ரேவதி ஆகியோர் அடங்குவர்.
பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் இத்தகைய வன்முறைகள் தடுத்து நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையோடும், சமூக அக்கறையின் காரணமாகவும் இக்கடிதத்தை எழுதியுள்ளனர். இக்கடிதத்தை எழுதியவர்களுக்கு எதிராக தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஹார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைவிட ஜனநாயக விரோத, அச்சுறுத்தல் நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.
'பம்பாய்' திரைப்படத்தை தயாரித்து இயக்கி திரையிட்டதற்காக தீவிரவாதிகள் இயக்குநர் மணிரத்னத்தின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். அந்த தீவிரவாதச் செயலுக்கும், நரேந்திர மோடி ஆட்சியில் தற்போது தொடுக்கப்படுகிற வழக்கிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் விக்டோரியா மகாராணிக்கும், இர்வின் பிரபுவுக்கும் நாட்டில் உள்ள நிலைமைகள் குறித்து காந்தி பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார். அவர்கள் பதில் கடிதம் எழுதினார்களே தவிர, மகாத்மா காந்தி மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கவில்லை. ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியை விட சர்வாதிகார நோக்கத்தில் நரேந்திர மோடி ஆட்சி செயல்படுவதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
ஏற்கெனவே சங்பரிவார் அமைப்புகளால் தபோல்கர், பன்சாரே, கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் ஆகிய முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு கடிதம் எழுதி முறையிட்ட செயலுக்காக அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடுப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
நாட்டு நலனில் அக்கறையோடு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இவர்கள் மீது புனையப்பட்டிருக்கும் வழக்கை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.