சோகத்தில் எம்.எஸ்.வியின் எலப்புள்ளி கிராமம்

சோகத்தில் எம்.எஸ்.வியின் எலப்புள்ளி கிராமம்
Updated on
1 min read

எம்.எஸ்.விஸ்வநாதனின் மறை வைத் தொடர்ந்து அவர் பிறந்த எலப்புள்ளி கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

பாலக்காடு சாலையில் கொழிஞ் சாம்பாறையிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது எலப்புள்ளி கிராமம். இந்த கிராமத்தில் எம்.எஸ்.வியின் பிறந்த வீட்டைத் தேடிச் சென்று விசாரித்தோம்.

“இந்த சுற்றுப்பகுதியில் உள்ள வர்கள் அனைவருமே ஒரே குடும் பத்தை சார்ந்தவர்கள். எல்லோரும் ஏதாவது ஒரு முறையில் உறவுக் காரர்கள். நானும் அவருக்கு ஒன்றுவிட்ட சொந்தம்தான். அனை வருக்குமே ‘மனயங்கத் ஹவுஸ்’ என்பதுதான் பெயரோடு ஒட்டிப் பிறந்த சொல். அதுதான் எம்.எஸ்.விக்கும் முதலெழுத்தாக அமைந்துள்ளது” என்றார் அவரின் வயதையொத்த ராஜீவ்வாத்ஸ மேனன்.

“நான் அவரைவிட ஒரு வயது மூத்தவன். இங்குள்ள பள்ளியில் அவர் நான்காம் வகுப்புவரை படித் தார். பிறகு படிப்பை நிறுத்திட்டு தனது அம்மாவுடன் சென்னைக்குப் போய்விட்டார். அவரது அம்மா இறந்த பிறகு இந்த வீட்டுக்கு வந்து சிறிதுநேரம் இருப்பார். பிறகு இங் குள்ள பகவதியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு போவார்.

ஒரு முறை அவரிடம், “உலக மெல்லாம் உன் பாட்டைத்தான் கேட்கிறது. ஊரெல்லாம் உன் கச் சேரிதான் நடக்கிறது. நீ பிறந்த ஊரில் ஒரு கச்சேரி செஞ்சிருக் கியா?” என்று கேட்டேன். அதற்கு அவர், ‘வாஸ்தவம்தான். என்னை இந்த ஊர்ல யாரும் கச்சேரிக்கு கூப்பிடலையே’ என்றார். ‘அதனால் என்ன நான் கூப்பிடறேன், வா. ஆனா கச்சேரிக்கான செலவைத்தான் எங்களால் செய்ய முடியுமான்னு தெரியலை’ என்றேன். இதைத் தொடர்ந்து தன் சொந்த செலவிலேயே இங்கு கச்சேரி நடத்தினார்.

அவர் வசதியான பிறகு இங்கு பல வீடுகளை வாங்கினார். அதில் ஒன்றை ஊருக்கு தான மாகக் கொடுத்தார். அதை விற்றுத்தான் கோயிலுக்கு பல் வேறு திருப்பணிகளைச் செய் தோம். அவர் இறந்த செய்தியை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அவரது இழப்பு இந்த ஊருக்கே பேரிழப்பு” என்றார் ராஜீவ்வாத்ஸ மேனன்.

எம்.எஸ்.வி பிறந்த வீட்டில் அவரது உறவுக்கார பெண்மணி ஒருவர் சில ஆண்டு முன்பு வரை இருந்தாராம். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதற்குப் பிறகு வீடு காலியாகவே இருந்தது. கவனிக்க யாரும் இல்லாததால் பாழடைந்து கிடக்கிறது வீடு. வீடு பழையதாகி இருந்தாலும் அவரது நினைவுகள் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளதை காண முடிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in