ஆறு மாதத்தில் 600 கிராம் எடையில் பிறந்த குழந்தையைக் காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை

குழந்தையுடன் பெற்றோர்
குழந்தையுடன் பெற்றோர்
Updated on
1 min read

ஈரோடு

ஆறு மாதத்தில் 600 கிராம் எடையில் பிறந்த குழந்தையைக் காப்பாற்றி ஈரோடு குழந்தைகள் நல மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், ஓட்டுநர். இவரது மனைவி பானுபிரியா. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக ஈரோடு வீரப்பம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பானுபிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

கருத்தரித்து 37 முதல் 40 வாரங்களில் குழந்தை பிறப்பது வழக்கம். ஆனால் பானுபிரியாவுக்கு 25-வது வாரத்திலேயே (ஆறு மாதம், ஒரு வாரம்) 600 கிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் குழந்தை 2 கிலோ எடையுடன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது, பெற்றோர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

திருமணமாகி 10 ஆண்டுகளில் 3 முறை கரு கலைந்து தற்போது 4-வது முறையாக உருவான கருவில் பிறந்த குழந்தை காப்பாற்றப்பட்டதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர். ஈரோடு போன்ற இரண்டாம் ரக நகரங்களில் குறைவான வாரத்தில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை காப்பாற்றப்படுவது மிக அரிது என தெரிவித்த குழந்தைகள் நல மருத்துவர் பூபதி, இதுபோன்று பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மற்ற குழந்தைகளைப் போல இருக்கும் என்றார்.

வெளிநாடு மற்றும் பெரிய நகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த நவீன சிகிச்சை தற்போது இங்கும் கிடைப்பதால் இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவிந்தராஜ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in