உள்ளாட்சித் தேர்தல்: 200 வார்டுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

உள்ளாட்சித் தேர்தல்: 200 வார்டுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டது சென்னை மாநகராட்சி
Updated on
1 min read

சென்னை

உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 200 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. குறைந்தபட்ச வாக்காளர் உள்ள வார்டு, அதிக வாக்காளர் எண்ணிக்கையுள்ள வார்டுகள் விவரமும் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து இன்று சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 200 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் (பொ) ஆர்.லலிதா இன்று (04.10.2019) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிட்டார்.

மேற்படி வாக்காளர் பட்டியல் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடம், மண்டல அலுவலகங்கள் 1 முதல் 15 வரை மற்றும் 200 வார்டு அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு இன்று முதல் வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் குறித்த விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரிபார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நடைபெற உள்ள சாதாரண உள்ளாட்சித் தேர்தலில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆண் வாக்காளர்களுக்கு 78 வாக்குச்சாவடிகளும், பெண் வாக்காளர்களுக்கு 78 வாக்குச்சாவடிகளும் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்கு 5,558 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5,714 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்த வாக்காளர் எண்ணிக்கை 57,97,652. இதில் குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலம், வார்டு-159ல் 2,921 வாக்காளர்களும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-137ல் 54,801 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், வருவாய் அலுவலர் திரு.சுகுமார் சிட்டிபாபு, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்”.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in