ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் சிறப்புப் பேருந்துகள்: முழு விவரம்

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் சிறப்புப் பேருந்துகள்: முழு விவரம்
Updated on
1 min read

சென்னை

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில், ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய தினங்களோடு சேர்த்து ஆயுத பூஜை (அக். 7), விஜய தசமியை (அக். 8) ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள், வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் என 6,145 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்ல, சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தாம்பரம் மெப்ஸ், தரமணி, மாதவரம் மற்றும் பூந்தமல்லி பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நேற்று தொடங்கியது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வரும் 23-ம் தேதி முன்பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன.

தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லலாம். மதுராந்தகம் வழியாக வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், புதுச்சேரி, கடலூர், சிதம்பரமும் விக்கிரவாண்டி வழியாக நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலுக்கும் செல்லலாம்.

கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லலாம். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, ஊத்துக்கோட்டை, காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர் செல்லலாம்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து திருத்தணி வழியாக திருப்பதிக்கும் பூந்தமல்லி வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தருமபுரிக்குச் செல்லலாம்.

அதேபோல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் வழியாக, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விருதாச்சலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், ஜெயம்கொண்டம், அரியலூர், செந்துறைக்குப் பயணிகள் செல்லலாம்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழக இணையதளத்திலும் (TNSTC), ரெட் பஸ் மற்றும் பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் வழியாகவும் முன்பதிவு நடந்து வருகிறது. பெரும்பலான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in