Published : 04 Oct 2019 02:19 PM
Last Updated : 04 Oct 2019 02:19 PM

நான்கு பிள்ளைகள் பெற்றெடுத்தும் கவனிப்பாரின்றி தெருவில் கிடக்கும் தாய்

அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே நான்கு பிள்ளைகளைப் பெற்றெடுத்தும், வயது முதிர்வுக்குப் பின்னர் பராமரிக்க ஆள் இன்றித் தெருவில் ஆதரவற்றுக் கிடக்கும் தாயைப் பார்த்து அப்பகுதி மக்கள் மனம் கலங்கிச் செல்கின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கம்பர் தெருவைர் சேர்ந்தவர் பட்டம்பாள் (95). இவரது கணவர் மாணிக்கம். இவர் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

பட்டம்பாளுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நான்கு பிள்ளைகள். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஆனால், இவர்களைப் பெற்றெடுத்த தாய் பட்டாம்பாள் உணவின்றி, படுக்க இடமின்றி தெருவில் கிடப்பது அப்பகுதி மக்களை மனம் கலங்கச் செய்துள்ளது.

பட்டம்பாளின் மூத்த மகன் சண்முகம்(65), இனிப்பு பலகாரக் கடை வைத்துள்ளார். இளைய மகன் சதாசிவம்(59) ஓய்வுபெற்ற ஆசிரியர். தாயைத் தெருவில் கிடத்தியுள்ள ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு எவ்வாறு நல்வழியைக் கொடுத்திருக்க முடியும் எனவும் மக்களின் மனதில் எண்ணங்களை ஓடச் செய்துள்ளார் சதாசிவம்.

வயது மூப்பின் காரணமாக பட்டம்பாளை வீட்டில் சேர்க்காததால், வரதராஜன் பேட்டையில் உள்ள ஒரு விடுதியில் அப்பகுதியை ஒருவர் கொண்டு சேர்த்துள்ளார். பின்னர், வடலூர் சபையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளார். பின்னர் மகன்களைக் காண தனது சொந்த ஊருக்கு வந்த பட்டம்மாளை மகன்கள் ஏற்காத நிலையில், மகள் சகுந்தலா சிறிது காலம் கவனித்து வந்துள்ளார். நாளடைவில் உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால், சகுந்தலாவின் கணவர், மகன்கள் வீட்டில் தன் மாமியாரைக் கொண்டு வந்து விட்டுள்ளார். அப்போது, மகன்கள் ஏற்றுக்கொள்ளாததால், ஒரு மகனின் வீட்டின் முன்பு கிடத்திவிட்டுச் சென்றுவிட்டார்.

ஆதரவற்றுக் கிடக்கும் பட்டம்பாள்

மகன்கள் கண்டுகொள்ளாததால், அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சேர்த்தபோது, உடன் இருக்க யாரும் இல்லாததால், மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து, முதல் சிகிச்சை கொடுத்துவிட்டு மகன்கள் வீட்டின் முன்பு விட்டு விட்டு அந்தத் தன்னார்வலர் சென்றுவிட்டார்.

இதுகுறித்து, தகவல்கள் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் வெளியானதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸார் மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து அவரது மகன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நான்கு பிள்ளைகளைப் பெற்று, அவர்களை வளர்த்து, திருமணம் செய்து கொடுத்து, நல்ல முறையில் வளர்த்தெடுத்த தாயினை கடைசிக் காலத்தில் கவனித்துக்கொள்ள பிள்ளைகள் மறுப்பது, அப்பகுதி மக்களிடையே மனசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாரதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x