

கரூர்
கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், கணக்கில் வராத ரூ.1.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கீதா, ரேகா, ரூபா ராணி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று (அக்.4) காலை முதல் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்சம் அதிக அளவில் வாங்கப்படுவதாகவும், இடைத்தரகர்கள் அதிக அளவில் லஞ்சம் பெற்றுத்தருவதாகவும் வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தின் கதவை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்த 13 இடைத்தரகர்களிடம் விசாரணை மேற்கொண்டும், அலுவலர்களிடம் சோதனை நடத்தியும் கணக்கில் வராத ஒரு லட்சத்து 31,890 ரூபாய் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2 மணிநேரத்தைக் கடந்தும் நடக்கும் இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன்