Published : 04 Oct 2019 10:44 AM
Last Updated : 04 Oct 2019 10:44 AM

காந்தியின் அஸ்தி திருட்டு: கமல் விமர்சனம்

மகாத்மா காந்தியின் அஸ்தி திருடப்பட்டது குறித்து கமல் விமர்சித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியிலுள்ள காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அன்றைய தினம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள காந்தி நினைவிடத்திலிருந்த அஸ்தி திருடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அங்கிருந்த காந்தியின் உருவப்படத்தையும் சிதைத்துள்ளனர். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தனது ட்விட்டர் பதிவில், "எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற பக்தர்காள். உம் நெத்தியில் பூசிடவைத்த அச்சாம்பலை ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர் சுட்டதின் பிணக்குவியல் கூடிடக்கூடிட உம்பக்தியின் அடிநாதம் காந்தியின் சாம்பலுடன் கைலாயமெய்தவே கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம் வாழ்த்துடன் கூடியே" என்று தெரிவித்துள்ளார் கமல்.

இந்த ட்வீட் புரியவில்லை என்று இணையத்தில் பலரும் கிண்டல் செய்யத் தொடங்கினர். இந்த ட்வீட்டுக்கு கீழேயே பலரும் விமர்சித்திருந்தனர். தற்போது இது தொடர்பாக கமல் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட குறிப்பில் "பக்தர்களே நீங்கள் காந்தியடிகளின் அஸ்தியைத் திருடிச் சென்றதால் எங்களுக்கும் ஒரு சிறு மகிழ்ச்சி தான், அதை நீங்கள் திருநீறாக நெற்றியில் பூசிக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

உங்களால் சுடப்பட்டு இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே அதன் மூலம் வரும் சாம்பலும் உங்களது பக்தியின் அடிநாதமும், காந்தியடிகளின் சாம்பலுடன் இணைந்து கைலாயம் செல்ல வேண்டும் என்றே கணக்கிலடங்கா இந்தியர்கள் அனைவரும் வாழ்த்தி விரும்புகின்றனர்" என்று கமல் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x