

வேலூர்
‘தனக்காக வாழாமல், பிறருக்காக வாழ்பவன் தமிழன்’ என்று சாலமன் பாப்பையாவின் புறநானூறு புதிய வரிசை வகை நூல் அறிமுக விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார்.
காட்பாடி சன்பீம் பள்ளியில் பேராசிரியர் சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ என்ற நூல் அறிமுக விழா நடந்தது. விழாவுக்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.ஜோதிமணி முன்னிலை வகித்தார். சன்பீம் பள்ளிகளின் துணைத்தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த் வரவேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விழாவுக்கு தலைமை தாங்கிப் பேசுகையில், ‘தமிழ் தாத்தா ஊ.வே.சாமிநாத அய்யர் தற்போது நம்மிடம் இல்லை. சாலமன் பாப்பையா தமிழ் தாத்தாவாக திகழ்கிறார். இவர் கடினமான பொருளையும் எளிமையாக சொல்பவர். புறநானூற்றில் பலநூறு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதனை நீங்கள் படிக்கவேண்டும். தமிழை ஏப்படி வளர்த்தார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன் தமிழன்’ என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் மதிப்புரையாற்றி பேசுகையில், ‘புறநானூற்றை 1894-ம் இண்டு ஊ.வே.சாமிநாத அய்யர் தொகுத்து வெளியிட்டார். அதன்பின்னர் 34 பதிப்புகளை புறநானூறு கண்டுள்ளது. தற்போது, பேராசிரியர் சாலமன் பாப்பையாவால் ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது நமக்கு ஒரு பொக்கிஷம்’’ என்றார்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி விமலா, வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதிபாஸ்கர், எஸ்.ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா ஏற்புரை நிகழ்த்திப் பேசுகையில், ‘‘இன்றைய சமூகம் வசதி படைத்தது. கிராமத்தில் சாதாரண ஏழை மக்கள் உள்ளனர். அந்த காலத்தில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள புறநானூறு உதவும். புறநானூறு பொதுமக்களின் சொத்து. இது புலவர்களின் கையில் சிறைபட்டு இருந்தது. இதனை நான் முறைப்படுத்தி, வரிசைபடுத்தி வெளியிட்டுள்ளேன். நம்முடைய தமிழ் மக்கள் சமயம், சாதி, அரசியலால் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் புறநானூற்றை படித்து இலக்கியத்தை தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.
விழாவில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன்லால், மதுரை மருத்துவக் கல்லூரி டாக்டர் சுகந்தி மோகன்லால், வழக்கறிஞர் ஆபிஷாஜார்ஜ், தியாகமூர்த்தி, தொழிலதிபர் பிரபாகரன், வேலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் டாக்டர் விஜய் கோவிந்தராஜ், உட்லக்ஸ் நிறுவன உரிமை யாளர் சி.கமலேஷ், ஜே.கே.பியூல்ஸ் உரிமையாளர் கே.கோ.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, சங்கீத கலாநிதி பத்மபூஷண் சுதாரகுநாதனின் இசை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியை பள்ளிகளின் கவுரவத் தலைவர் டி.ஹரிகோபாலன் தொகுத்து வழங்கினார். முடிவில், சன்பீம் பள்ளிகளின் தாளாளர் தங்கபிரகாஷ் ஹரி நன்றி கூறினார்.