Published : 04 Oct 2019 10:28 AM
Last Updated : 04 Oct 2019 10:28 AM

காந்தி படம் போட்ட அஞ்சல் அட்டையை 68 ஆண்டாக பாதுகாக்கும் தபால் அலுவலர்

காந்தி, அவரது மனைவி கஸ்தூரி பாயுடன் இருக்கும் அஞ்சல் அட்டை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

‘வாட்ஸ் அப்’, ‘பேஸ்புக்’, ‘இன்ஸ்டா கிராம்’ போன்ற நொடிப்பொழுதில் தகவல்களைக் கொண்டு செல்லும் ஹைடெக் தொழில்நுட்பம் வந்தாலும் அஞ்சல் அட்டை தகவல் பரிமாற்றத்தில் கிடைத்த சுவாரசியமும், ஆனந்தமும் தற்போது கிடைப்பது இல்லை.

மனதுக்கு நெருக்க மானவர்களின் மகிழ்ச்சியையும், அழுகையையும் தாங்கி வரும் அந்த அஞ்சல் அட்டைகளை பொக்கிஷம் போல் தற்போதும் பாதுகாத்து வருவோர் இருக்கிறார்கள். அவர்களில் சற்று வித்தியாசமாக கோவையைச் சேர்ந்த தேசிய விருது பெற்ற தபால் அலுவலர் ஹரிஹரன், காந்தியின் அரிய புகைப்படங்கள், அஞ்சல் தலைகளைச் சேகரித்து வைத்துள்ளார். அதில், தபால்துறை 1951-ம் ஆண்டு அக்.2-ம் தேதி காந்தியின் 82-வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தி படத்தைப்போட்டு வெளியிட்ட அஞ்சல் அட்டை முக்கியமானது.

இந்த அஞ்சல் அட்டை வெளி யிடும்போது அதன் விலை 9 பைசாவாக இருந்தது. மற்ற அஞ்சல் அட்டைகளில் இருந்து இந்த அஞ்சல் அட்டை சற்று வித்தியாசமாகவும், பெரும் வரவேற்பையும் பெற்றதால் 1 ½ அணாவுக்கு விற்றார்கள்.

இந்த அஞ்சல் அட்டை கடந்த 68 ஆண்டு களாக பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார் தபால் அலுவலர் ஹரிஹரன். இது குறித்து அவர் கூறியதாவது: நாட்டுக்காகப் பாடுபட்டோர், பெருமை தேடித் தந்தோரை கவுரவிக்கும் வகையில் தபால் துறை அவர்களது படத்தைப் போட்டு அஞ்சல்தலை வெளியிடுகிறது.

நாட்டின் விடுதலையை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்திய தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு 87 நாடுகள், அவரின் படத்தைப்போட்டு அஞ்சல் தலைகளை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளன.

நான் அறிந்தளவுக்கு சர்வதேச அளவில் வேறு எந்த நாட்டின் தலைவருக்கும் இதுபோல் அஞ்சல் தலைகள் வெளியிடப்படவில்லை. அதேபோல, காந்தி படம் போட்ட அஞ்சல் அட்டை இந்தியாவில் வேறு யாருக்கும் வெளியிடப்படவில்லை. இந்த அஞ்சல் அட்டை இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நாசிக்கில் அச்சடிக்கப்பட்டது.

காந்தி, அவரது மனைவி கஸ்துரிபாயுடன் இருக்கும் அஞ்சல் தலை ஒன்றையும் மத்திய அரசு 1969-ம் ஆண்டு அக்.2-ம் தேதி வெளியிட்டு கவுரவப்படுத்தியது. இது இந்தியா வெளியிட்ட முதல் தம்பதி அஞ்சல் தலை என்ற பெருமையைப் பெற்றது. இதுபோன்று காந்தியைப் பற்றி அரிய தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க அவரது புகைப்படங்கள், அஞ்சல் தலைகள், அஞ்சல் அட்டைகளையும் சேகரித்து வைத்துள்ளேன், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x