Published : 04 Oct 2019 10:29 AM
Last Updated : 04 Oct 2019 10:29 AM

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மற்றும் ஊக்கத் தொகையை உடனே வழங்குக: வைகோ

சென்னை

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை மற்றும் ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (அக்.4) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகள் இயற்கை இடர்ப்பாடுகள், இடுபொருட்கள் விலை ஏற்றம், ஆட்கள் பற்றாக்குறை அனைத்தையும் எதிர்கொண்டு கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு கொள்முதல் விலையை, உற்பத்தி செலவுகளுடன் 50 விழுக்காடு அதிகரித்துத் தரவேண்டும். அதற்குக் கொள்முதல் விலையாக ஒரு டன்னுக்கு 4000 ரூபாய் தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு தீர்மானித்த கொள்முதல் விலையைக் கூட வழங்காமல், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை அலைக்கழிக்கின்றன.

கடந்த 5 ஆண்டு காலத்தில் கரும்பு விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடமிருந்து பெற்றுத் தராமல், தமிழக அரசு அலட்சியமாக இருக்கிறது. 2013 முதல் 2017 ஆம் ஆண்டு வரை கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகை ரூ.1430 கோடி உள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த விலையைக்கூட ஆலைகள் தரவில்லை. கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின்படி கரும்பு வெட்டிய நாளிலிருந்து 14 நாட்களுக்குள் அதற்குரிய விலையைத் தர வேண்டும். ஆனால், அதுபோல் தருவது இல்லை.

நடப்பு ஆண்டில் மட்டும் தனியார் ஆலைகள் ரூ.281 கோடி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் ரூ.125 கோடி என மொத்தம் ரூ.406 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை வைத்திருக்கின்றன. இதையும் சேர்த்து விவசாயிகளுக்குச் சேர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை ரூ.1836 கோடி ஆகும். இதனைப் பெற்றுத் தருவதாக ஒப்புக்கொண்ட தமிழக அரசு, இதுவரையில் அதனை நிறைவேற்ற முன்வரவில்லை.

இந்நிலையில், கரும்பு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், மத்திய-மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாகத்தினர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம், செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை அரசு விருந்தினர் இல்லத்தில் நடைபெற்று இருக்கிறது.

இக்கூட்டத்தில், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய மத்திய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலை நிலுவை, வங்கியில் கரும்பு பயிர்க்கடன் பெறுவதில் உள்ள பிரச்சினைகள், சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்த தங்களது கோரிக்கைகளை கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். அவற்றை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.

2016-17 அரவைப் பருவத்தில் மத்திய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2550 உடன், தமிழக அரசு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.200 சேர்த்து வழங்க முன்வந்தது. இந்த ஆண்டு மத்திய அரசு 2017-18 அரவைப் பருவத்தில் டன் ஒன்றுக்கு கரும்பு கொள்முதல் விலையாக ரூ.2612.50 ஆக தீர்மானித்துள்ளது. இதனுடன் தமிழக அரசு ஊக்கத் தொகையாக ரூ.137.50 சேர்த்து வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆக கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.2750 என்று நிர்ணயம் செய்திருப்பது எந்த வகையிலும் விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகாது.

எனினும் கரும்பு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கிட ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்தது.

கரும்பு விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் ஊக்கத் தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்பு வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும்," என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x