

தருமபுரி
தருமபுரி நகரில் டெங்கு கொசு உற்பத்திக்கு வாய்ப்பளித்த 2 திரையரங்குகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தருமபுரி நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, சென்னையில் இருந்து வந்துள்ள, டெங்கு காய்ச்சல் தடுப்பு மருத்துவ அலுவலர் யோகாநந்த் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று தருமபுரி-பென்னாகரம் சாலையை ஒட்டி அமைந்துள்ள கட்டிடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் அமைந்துள்ள 2 திரையரங்குகள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில், சுகாதாரத்தை முறையாக பராமரிக்காமலும், டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக வசதியாக டயர், பெயின்ட் டப்பாக்களை திறந்த வெளியில் விட்டிருந்ததும் தெரிய வந்தது. இவற்றிலும், தண்ணீர் தொட்டியிலும் ஏராளமான டெங்கு கொசுப் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, 2 திரையரங்குகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னர், ஆணையாளர் மகேஸ்வரி கூறும்போது, ‘மழைக் காலத்தை ஒட்டி பரவலாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இது தொடராதபடி, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் நகராட்சி நிர்வாகம் நகராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாகனம் மூலம் விழிப்புணர்வு, களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசுப் புழுக்களை கண்டறிந்து அழித்தல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
வீடு, வணிக மையங்கள், காலி நிலங்களில் நீரை தேக்கி வைத்து டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக காரணமாக இருப்பவர்கள் மீது, தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதற்கான ஆய்வுகள் நகராட்சிப் பகுதிகளில் தொடரும்’ என்றார்.