

சென்னை
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்.3) வெளியிட்ட அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளதால் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.