

மதுரை
இந்தியாவை இந்துக்கள் நாடு எனக் கூறுவது காந்தியின் கூற்றுக்கு மாறானது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி நேற்று கன்னியாகுமரியில் நடந்த காந்தியின் 150-வது பாதயாத்திரையில் பங்கேற்றுவிட்டு இன்று (வியாழக்கிழமை) காலையில் மதுரைக்கு வந்தார். அப்போது, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மகாத்மா காந்தி, பல்வேறு போராட்டங்கள் மூலம் நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார். அவரது 150-வது பிறந்த நாளில் நாடு எப்படி இருக்கிறது என்பதை மக்கள் உணரவேண்டும்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என பாஜக தலைவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள், இந்தியாவை இந்துக்கள் நாடு எனக் கூறுவது காந்தியின் கூற்றுக்கு மாறானது. தற்போது காந்தி உயிரோடு இருந்திருந்தால் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார் என சோனியாகாந்தி கூறினார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநில மக்கள் புத்திசாலிகள் என்பதால் இதையெல்லாம் உணர்ந்து மோடியை வீட்டுக்கு அனுப்ப வாக்களித்தனர்.
வடமாநிலங்களில் மத உணர்வை தூண்டி ஆட்சியை பிடித்துள்ளனர். எனவே, தென்மாநில மக்கள், வடமாநில மக்களுக்கு பாஜகவின் நாடகத்தை எடுத்துச் சொல்லவேண்டும்.
வெளிநாட்டில் தமிழைப் பற்றி பெருமை பேசும் பிரதமர் மோடி, தமிழகத்திற்கு வந்தபோது இட்லியைப் பற்றி பேசுகிறார். அவரது அமைச்சரவையிலுள்ள அமித்ஷா, இந்தியாவில் ஒரே மொழியாக இந்தி மட்டுமே இருக்க வேண்டும் என்கிறார். இப்படி மோடியும், அமித்ஷாவும் நாடகமாடுகின்றனர்.
ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற பிரதமர் மோடியின் குறிக்கோள் எடுபடாது.
இந்தியாவில் பலமொழி பேசும் மக்கள் வசிக்கும்போது இந்தி மொழி மட்டுமே சாத்தியமாகாது. பாஜக, மகாத்மா காந்தியை கையில் எடுத்துக்கொண்டு முன்னுக்குப்பின் முரணாக பேசுகின்றனர். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனைத் தளர்த்த வேண்டும் என்பது சுபஸ்ரீ போன்று மற்றவர்களையும் பழிவாங்கும் செயலாக மாறும். எனவே, அரசியல்கட்சியினர் நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க வேண்டும்" என்றார்.
நாராயணசாமியுடன் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, காமராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.