

திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் நகர் உள்ளது. நூற்றுக்கணக்கான ஆதிதிராவிடர்கள் மற்றும் அருந் ததியர்கள் உள்ளிட்ட சமூகங் களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு, ஆதிபராசக்தி கோயில் எதிரே உள்ள வீதி, காவல்துறையினர் குடியிருப்பு வழியாக ரயில் நிலையத்துக்கு செல்லும் பாதையை இணைத் துள்ளது. அந்த வீதியை பயன்படுத்தி வந்த மக்களுக்கு, காவல்துறை வீட்டு வசதி வாரியம் மூலம் பிரச்சினை எழுந்தது.
காவல்துறை குடியிருப்பு பகுதியைச் சுற்றி கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு இரு பகுதிகளையும் இணைத்த சாலைக்கு நடுவே சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. இதனால் தலித் மக்களின் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது. காவல்துறை என்பதால் எந்த கேள்வியும் எழுப்பாமல், அச்சத் துடன் அந்த பகுதி மக்கள் ஒதுங்கிக்கொண்டனர். பின்னர், அருகாமையில் உள்ள வீதி வழியாக ரயில் நிலையத்துக்கு செல்லும் முத்து விநாயகர் கோயில் வீதியை பயன்படுத்தி வந்தனர். அந்த சாலையும், தற்போது மறிக்கப்பட்டு கருங்கற்களை கொண்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் வீரபத்திரன் கூறும்போது, “பாதையை மறித்து கட்டப்பட்ட காவல்துறை குடியி ருப்பு சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும். அதேபோல், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிலர் கட்டியுள்ள சுவரையும் அகற்ற வேண்டும். இல்லையென்றால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் ஆகஸ்ட் 5-ம் தேதி அகற்றப் படும். பட்டா இடத்தில் கட்டியதாக கூறுகின்றனர். பணம் வசூலித்து தீண்டாமைச் சுவரை கட்டியுள்ளனர். 2 தீண்டாமைச் சுவர்களையும் அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்” என்றார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் செல்வன் கூறும்போது, “அம்பேத்கர் நகர் மக்களை அழைத்து கூட்டம் நடத்தி உள்ளோம்.
இதுகுறித்து ஆட்சியருக்கு மனு கொடுக்கப் பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், குறிப்பிட்ட சிலர் எழுப்பிய தீண்டாமைச் சுவர் ஆகஸ்ட் 5-ம் தேதி அகற்றப்படும்” என்றார்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரியை தொடர்புகொண்டு கேட்டபோது, “சுவர் எழுப்பப்பட்டுள்ள இடம், அருணாசலம் என்பவரின் மகன்கள் பெயரில் கூட்டு பட்டாவில் உள்ளது. சுவரை அகற்றப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து காவல்துறையுடன் ஆலோசனை நடத்தி சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை குடியிருப்பு சுற்றுச் சுவர் குறித்து ஆய்வு செய்யப்படும்” என்றார்.