

சென்னை
உணவு சுவையூட்டியான அஜினமோட்டோவுக்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காற்று மாசுபாடு குறித்த ஒரு நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ''உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அஜினமோட்டோவுக்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முதல்வரிடம் கலந்து ஆலோசித்த பிறகு, இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.
பிளாஸ்டிக் கப்புகளில் டீ, காபி சாப்பிடுவது குறித்து நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து செய்யும்போது கேன்சர் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிளாஸ்டிக் தடை இன்னும் கடுமையாக்கப்படும்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் தீபாவளிக்குப் பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசை ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க முடியும். தரம் பிரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்'' என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.