

சென்னை
நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வரும் 15-ம் தேதி முடிவெடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக இருவேறு நீதிபதிகளிடம் இருந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதி கல்யாண சுந்தரம் முன் பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்த வழக்குகள் இன்று (அக்.3) நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தலுக்குத் தடை கோரியும், தேர்தலை ரத்து செய்யக் கோரியும் மனுத்தாக்கல் செய்த ஏழுமலை, பெஞ்சமின் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு நடிகர் சங்கம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர், ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணவிடாமல் தொடர்ந்து வழக்கில் கால அவகாசம் கோரி வருவதாகவும், தற்போது வாக்கு எண்ணிக்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
இதையடுத்து நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் தரப்பினருக்கு அவகாசம் வழங்கும் வகையில் வழக்கை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி கல்யாண சுந்தரம், அன்று அவர்கள் தரப்பில் வாதங்களை முன் வைத்தாலும், இல்லாவிட்டாலும், நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.